udhayanidhi stalin on election campaign in bargur

Advertisment

வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூரில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் மற்றும் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மதியழகன் ஆகியோரைஆதரித்து நேற்று (18.03.2021) மத்தூர் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் முன்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தி.மு.கவின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் அவர்களை அறிமுகப்படுத்தி, கை சின்னத்தில் வாக்களிக்குமாறும், திமுக வேட்பாளர் மதியழகனை அறிமுகப்படுத்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசிற்கு அடிமையாக உள்ள அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், டெல்லியில் உள்ள அமாவாசையையும் தமிழகத்தில் உள்ள அமாவாசையையும் ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார். ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் பத்து வருடங்களாக ஆட்சி செய்தும் வேட்பாளரின் பெயர் கூட தெரியாமல் பொதுமக்கள் இருக்கின்றனர். இந்த அவலம் திமுக ஆட்சியில் ஒருபோதும் நிகழாது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் முதலில் கூவத்தூர் செல்வார்கள், இல்லையெனில் பிஜேபிக்கு செல்வார்கள், ஆகையால் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று முழங்கினார்.

சசிகலாவின் காலுக்கு அடியில் வெற்றி நடைபோடும் தமிழகம் இதுதான் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தைக் காட்டி பொதுமக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு நீங்கள் வைக்கும் ‘கொட்டு’ எனவும் தெரிவித்தார். மத்தூர் பகுதியில் நீர் ஆதாரங்கள் அதிகரிக்கப்படும், மத்தூரில் கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுகவின் வாக்குறுதிகளை முன்வைத்து தி.மு.க வேட்பாளர் மதியழகன் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார். இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.