ADVERTISEMENT

சென்னையில் ஆசைவார்த்தை கூறி தனியார் பள்ளி மாணவிகள் கடத்தல்... போக்ஸோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் கைது! 

10:11 AM Nov 26, 2019 | kalaimohan

சென்னையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமிகளை ஆசை வார்த்தைகாட்டி கூட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கண்ணகிநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவந்த மூன்று மாணவிகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதால் உங்களது பெற்றோரை கூட்டி வாருங்கள் என அந்த மூன்று மாணவிகளிடமும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியள்ளனர். ஆனால் பெற்றோரிடம் இதைக் கூறுவதற்கு பயந்து மாணவிகள் 3 பேரும் மறுநாள் பள்ளிக்கு வராமல் பள்ளி சீருடையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இப்படி தனியார் பள்ளி மாணவிகள் சீருடையில் பள்ளிக்கு செல்லாமல் அதே பகுதியில் சுற்றித் திரிவதை கவனித்து வந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் கனகராஜ், விஜயகுமார் ஆகிய இருவரும் நோட்டமிட்டு அந்த மூன்று சிறுமிகளிடமும் பேச்சு கொடுத்துள்ளனர். பேச்சுக் கொடுத்த இருவரிடமும் மாணவிகள் 3 பேரும் சகஜமாக பேச ஆட்டோவில் அமரவைத்து அக்கறை கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர் அந்த ஆட்டோ ஓட்டுனர்கள்.

இது தொடர்கதையாகி அடுத்த நாளும் அதேபோல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு மாணவிகள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருடனும் சேர்ந்து சினிமா தியேட்டருக்கு சென்றுவிட்டு பள்ளி விடும் நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்படி இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை, வீட்டிலும் சொல்லவில்லை, ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும் என மூன்று மாணவிகளில் ஒரு மாணவி அச்சமடைந்து வீட்டிலேயே இருந்து கொண்டார். ஆனால் மற்ற இரு மாணவிகள் வீட்டைவிட்டு வேறு எங்காவது வெளியே சென்று விடலாம் என்று முடிவெடுத்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர்களின் ஆசை வார்த்தையை நம்பி கனகராஜ், விஜயகுமாருடன் சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த இரண்டு மாணவியின் பெற்றோர்கள் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் மகள்களை காணவில்லை புகார் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல்போன இரு மாணவிகளை தேடிவந்தனர். பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த மாணவிகளில் ஒருவரான வீட்டிலிருந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் எல்லாம் வெளியே வந்தது.

அதனை அடுத்து துரைப்பாக்கம் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியபோது மாணவிகள் இருவரும் ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து உறுதிப்படுத்திய போலீசார். ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் மற்றும் விஜயகுமாரின் செல்போன் எண்களின் சிக்னல்களை வைத்து இருவரையும் பின்தொடர்ந்தனர்.

சென்னையிலிருந்து மாணவிகளை கும்பகோணம் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் கோவிலில் வைத்து மாணவிகளுக்கு தாலி கட்டி அங்கிருந்து திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளனர். அதனையடுத்து திருப்பூரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கனகராஜ், விஜயகுமாரிடம் இருந்து சிறுமிகளை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.

இதில் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன் என்பது விசாரணையில் தெரியவந்தது. 19 வயதான விஜயகுமார் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவன். பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT