
கோவை கார் வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக சென்னை, கோவையில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதேபோல் மத்திய உளவுத்துறை கொடுத்த சுற்றறிக்கை அடிப்படையில் சென்னையில் கடந்த வாரம் நான்கு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அதேபோல் அண்மையில் ராயபுரம் கல்மண்டபம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைப்பையுடன் சிக்கிய மூன்று நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கைப்பையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்பான ஆவணங்கள், வெடிபொருள்கள் பற்றிய குறிப்புகள் இருந்தால் முகமது மீரான் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இன்று சென்னையில் போலீசார் மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு, முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொடுங்கையூரில் முகமது தஃப்ரீஷ் என்பவர் வீட்டில் புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.