
சென்னையில் பூட்டப்பட்ட வீட்டில் கணவன் இறந்து கிடக்க மனைவி அதே வீட்டுக்குள் இரண்டு நாட்களாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வைக்கோக்காரன் தெருவைச் சேர்ந்தவர்கள் அசோக் பாபு-பத்மினி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வந்தனர். மகள் ஆர்த்திக்கு திருமணம் ஆகியிருந்த நிலையில் கணவர் குடும்பத்தோடு வசித்து வந்தார். தனது அப்பாவிடம் பேசுவதற்காக மகள் ஆர்த்தி கடந்த இரு தினங்களாக போன் செய்துள்ளார். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. இதனால் அச்சமடைந்த மகள் ஆர்த்தி, போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது வீட்டுக்குள் அசோக் பாபு இறந்து கிடந்தார். அவர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி பத்மினி இருந்தார். அசோக் பாபுவின் சடலத்தை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அசோக் பாபுவின் மனைவியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.