ADVERTISEMENT

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் பேராசிரியர் பணி நேர்காணலில் முறைகேடு ! குமுறும் பேராசிரியர்கள் !

03:23 PM Nov 11, 2019 | kirubahar@nakk…

இந்தியாவில் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒரு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி உள்ளது. 2012 ஆம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, துணை வேந்தர் பேராசிரியர் கமலா சங்கரன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் இரண்டு பேராசிரியர், நான்கு இணைப் பேராசிரியர், 12 துணைப் பேராசிரியர் என மொத்தம் 18 பணியிடங்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் ஒன்பது மற்றும் பத்தாம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நேர்காணலில் திட்டமிட்டு அரசாங்கத்தின் நடைமுறைகளை, பல்கலைக்கழக நிதிக் குழு வழிகாட்டுதல்கள் அத்தனையும் மீறி ஒரு சட்டக்கல்லூரி நேர்காணலே விதிமுறை மீறி முறைகேட்டுடன் நடத்தியுள்ளார்கள் என்று அங்கு உள்ள பேராசிரியர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், பதினெட்டு பணியிடங்களை நிரப்ப மொத்தம் நாற்பது நபர்களே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு பணியிடத்திற்கு குறைந்தது பதினைந்து நபர்களை அழைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதிக் குழு மிகத் தெளிவாக வழிகாட்டுகாட்டுதல்கள்கள் வழங்கியிருக்கும்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அதனை மிகவும் சாமர்த்தியமாக கைக்கழுவியிருக்கிறது.

நேர்காணலிற்கான தேர்வுக்குழுவில் பட்டியல் சாதியினரைச் சேர்ந்தவர் ஒருவர் அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து கட்டாயமாக இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதிக் குழு வரையறுத்திருக்கிறது. பல்கலைக்கழகத்தில் அப்பிரிவிணைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இருந்த போதிலும் அவர்களில் யாரும் தேர்வுக் குழுவில் அமர்த்தப்படவில்லை.

பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பங்கினை வழங்காத நிறுவனங்களை பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் வன்மையாக கண்டித்தது குறிப்பிடதக்கது.

நேர்காணலிற்கான தேர்வுக்குழுவில் புது டில்லியில் அமைந்திருக்கும் இந்திய சட்ட நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மனோஜ் குமார் சின்ஹா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கமலா சங்கரன், பெங்களூரில் அமைந்திருக்கும் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிஜு ஜோசப், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வி.ஜி ஹெகிடே, காரைக்குடி அழகப்பபா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ந. ராஜேந்திரன், திருச்சி சட்டக் கல்லூரியின் முதல்வர் ம.இராஜேஸ்வரன் என ஆறு பேர் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்துறை பேராசியர்களுக்கு பணியில் சேருவதர்கான அழைப்புக் கடிதம் வழங்குவது குறித்தான அவசர நிர்வாகக் குழு கூட்டம் வருகிற பதிநான்காம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பணி நியமன அறிவிக்கையில் ஒரு பணியிடத்திற்கு எத்தனை பேர் நேர்காணலிற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

மொத்தமாக எவ்வளவு விண்ணப்பங்கள் வந்தன என்பது குறித்தும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமூகநீதிக் கோட்பாடான அறுபத்தி ஒன்பது விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி சாதிவாரியான வரிசையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களும் தெரியப்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் இது குறித்த செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டின் சமூகநீதிக் கோட்பாட்டைக் குழி தோண்டி புதைப்பதற்காகவே இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு தேசிய தகுதித் தேர்வு அல்லது மாநில தகுதித் தேர்வினை முடித்திருப்பது கட்டாயம். தேசிய தகுதித் தேர்வு அல்லது மாநில தகுதித் தேர்வினை முடித்த அனைவருக்கும் நேர்காணல் கடிதம் அனுப்பப்படவில்லை.

ஒரு பணியிடத்திற்கு எத்தனை பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று பணி அறிவிக்கையில் குறிப்பிடாத பட்சத்தில் பல்கலைக்கழகம் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க முடியாது. மாறாக தகுதி பெற்ற அனைவரையும் நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்.

குறிப்பாக பொருளியல் துறையில் ஐந்து பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். வரலாற்று துறையில் இருவர் மட்டும் அழைக்கப்பட்டனர். இரண்டு துறைகளிலும் தலா ஒரு காலியிடங்கள் இருப்பது குறிப்பிடதக்கது.

இவ்விடத்தில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உச்சநீதிமன்ற தீர்ப்பினை அவமதித்துள்ளது. 2021 லிருந்து வெளியிடப்படும் துணைப் பேராசிரியர் பணி அறிவிக்கைகளில் முனைவர் பட்டம் கட்டாயம் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ஆனால் இங்கே மதிப்பீட்டிற்கான நூறு மதிப்பெண்களில் இப்போதே முனைவர் பட்டத்திற்கு முப்பது மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமான மதிப்பெண் வழங்கீட்டு முறையாகும். பல்கலைக்கழக மானியக் குழு, மதிப்பெண் வழங்கீட்டு முறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிற போது, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அதனை கொஞ்சம் கூட கண்டுகொண்டதாக இல்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தால் ஒரு பணிசேர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. பேராசிரியர், இணை பேராசிரியர், இணை துணை பேராசிரியர், இணை நூலகர், துணை நூலகர் என இருபத்தி மூன்று பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அப்பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் வெளியிட்டுள்ளார். இதில் முறையான விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றும், இதை எதிர்ந்து மதுரை உயர்நநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணைக்கு எடுத்துக்களப்பட்டுள்ளது.

இத்தனை விதிமீறல்களையும் தமிழகத்தின் புதிய தலைமைநீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஏ.பி.சாஹி மற்றும் முதல்வரும் சட்ட அமைச்சரும் தலையிட்டு கமலா சங்கரன் வெளியிட்ட பணி அறிவிக்கையினையும், நடத்தி முடிக்கப்பட்ட நேர்காணல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது நீதியின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT