
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தமிழன் என்பவர் திருமண மண்டபங்களில் டெக்கரேஷன் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் மேலகல்கண்டார் கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கத்திமுனையில் அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து செந்தமிழன், பொன்மலை காவல் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்தது குறித்து புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில் பூபாலன் என்பவரை காவல்துறையினர் பிடித்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தமிழனிடம் பணம் பறித்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் மட்டுமின்றி பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், பாலக்கரை என திருச்சி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் முறையே கௌதம், அய்யனார், சுரேஷ் ஆகிய நபர்களிடம் நடந்த வழிபறிகளில் ஈடுபட்ட செந்தில்குமார், ஜாகீர் உசேன் மற்றும் நாகராஜ் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், பொன்மலைப்பட்டி பகுதியில் கௌதம் என்பவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த செந்தில்குமாரிடம் இருந்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.