
திருச்சி மாநகரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் அறிவாலயம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் அரிவாளை காட்டி ரூ.2000 மற்றும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாக கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட தினேஷ்குமார்(29), என்பவர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், விசாரணையில் வழக்கின் குற்றவாளியான தினேஷ்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அதேபோல், கடந்த 10ம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பைபாஸ் கொண்டயம்பேட்டை சேவை சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் அய்யப்பன் (எ) அரவிந்தன்(31), என்பவர் ஊழியர்களை தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியதாகவும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட அரவிந்தன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் விசாரணையில், அரவிந்தன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதன் மூலம், தினேஷ்குமார் மற்றும் அரவிந்தன் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு மற்றும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அந்த நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கும் இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டம் ஆணை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.