Skip to main content

புதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Transport workers struggle continues for the third day in Pudukkottai ... Public suffering

 

14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் 385 அரசு பேருந்துகளில் 40 பேருந்துகளே இயக்கப்படுகிறது. தற்காலிகப் பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தாலும் நேற்று ஆலங்குடி பகுதியில் ஏற்பட்ட அரசு பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதுக்கோட்டையில் வெறும் 15 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்காக தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடியுள்ளார். அதேபோல் சென்னையிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எப்பொழுதுமே காலை 5 மணியில் இருந்தே பேருந்து சேவை தொடங்கும் நிலையில், தற்பொழுது குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.