Skip to main content

TNPSC குரூப்-1 தேர்வு எழுதுவதில் சிக்கல்! தேர்வர்களின் கோரிக்கைக்குத் தேர்வாணையம் செவிசாய்க்குமா?

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

tnpsc

 

இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடப்பதாக இருந்த குரூப்-1 தேர்வு, கரோனா ஊரடங்கு காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததால், அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3ஆம் தேதி 856 மையங்களில் குரூப் -1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.

 

இதனால், தேர்வர்களுக்கு உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

ஏனெனில், TNPSC ஒருமுறைப் பதிவுடன் (One Time Registration) ஆதார் எண்ணை இணைக்க  முயலும்  போது, பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.


 
1) இங்கே நிறையத் தேர்வர்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தற்போது அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண்ணை இணைக்கச் செல்லும் போது, ஒரு சில தேர்வர்களின் மொபைல் எண் மூன்று நாட்களில் இணைகிறது.

 

ஆனால், ஒரு சிலருக்கு 'பயோமெட்ரிக் அப்டேஷன் ஃபெயில்' என்னும் பிழை (error) காரணமாக தங்களது எண்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இன்னும், சிலருக்கு இந்தப் பிழை (error) நேரிடாவிடினும், தங்களது எண்ணைப் பதிவு (update) செய்ய 2, 3 நாட்களுக்கு மேல் ஆகுவதாகத் தெரிவிக்கின்றனர்.

 

2) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தேர்வர்களின் பலரது மொபைல்களுக்கு (OTP) நம்பர் வருவதே இல்லை என்ற குறைபாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களாலும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் தேர்வுக்கு வருடக்கணக்கில் உழைத்தும், தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை உணர்வதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

 

3) பல தொழில்நுட்பப் பிழையினை சந்திப்பதாகத் தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

சிலருக்கு, OTR காலாவதி ஆகிவிட்டது. அதனை அவர்கள் புதுப்பிப்பதற்காக கட்டணம் செலுத்தியபோது, Payment Success என்ற நிலையை online Payment செய்யும் போது அடையவில்லை. இதன் காரணமாக, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.

 

மேலும், ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரு வருடமாக கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு இல்லாத சூழ்நிலையில், ஒரு வருடத்திற்குப் பின் தேர்வு எழுதும் ஆவலில் இருந்தவர்கள், தற்போது தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற மனக்கவலையில் உள்ளனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால் தேர்வு தயாரிப்புப் பணிகளில் கவனத்தோடு ஈடுபட முடியவில்லை.

 

TNPSC தேர்வாணையம், தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள சில அறிவுரைகளையும், செயல்முறை பதிவு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இவை, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும் கூட, இந்த ஒருமுறை மட்டும் விண்ணப்பித்த அனைவரும் தேர்வெழுத TNPSC தேர்வாணையம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

 

ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அளவு குறைவாக இருப்பதாலும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்படுவதாலும், இந்தமுறை மட்டும், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் என்ற நிபந்தனையைத் தளர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் தேர்வு எழுதுபவர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.