ADVERTISEMENT

அமைச்சர் ஏற்பாட்டில் தண்ணீர் திருட கோவில்நிலம் வளைப்பு... பொதுமக்கள் போராட்டம்!

06:24 PM Sep 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி என்ற பகுதியில் மிகவும் பழமையான கரியபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக 4.59 ஏக்கர் நிலம் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பெருந்துறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது.

ADVERTISEMENT

பிறகு பேரூராட்சி நிர்வாகம் அந்த கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குடிநீர் தேவைக்கு எனக் கூறி குளம் அமைத்தது. அதன் பிறகு, பெரிய ராட்சச குழாய்களைப் பூமியில் பதித்து மின்மோட்டார்கள் மூலம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி கால்வாய் கசிவுநீரை அப்படியே உறிஞ்சி அந்தப் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்தது. இதனால் கொதித்தெழுந்த அப்பகுதி மக்கள் கோவில் இடத்தை பேரூராட்சிக்கு விற்பனை செய்யக் கூடாது அது சட்டவிரோதம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கீழ்பவானி கால்வாய் கசிவுநீரை மின்மோட்டார்கள் மூலம் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்வதால் கீழ்பவானி கால்வாய் கசிவுநீரை நம்பி பாசனத்தை மேற்கொண்டு வரும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் அங்குள்ள பெரும்பள்ள ஓடைக்கான நீர்வரத்தும் இல்லாமல்போகும் என்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். தனியார் சிலரின் சுயநலத்திற்காக விவசாயத்தை அழிக்கும் பாதக செயலை செய்யாதே என கோஷம் எழுப்பி "இந்து சமய அறநிலையத்துறை, கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை பேரூராட்சிக்கு விற்பனை செய்யக் கூடாது" அதே போல் பேரூராட்சி நிர்வாகம் கோவில் நிலத்தில் குளம் அமைக்கும் திட்டத்தைக் உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருவாச்சியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியினர் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி வைத்து கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிலத்தை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதோடு அதை பொதுமக்களிடம் உறுதியளித்திடும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.


மாவட்ட அமைச்சர் கருப்பனனுக்கு வேண்டப்பட்ட சில தொழிலதிபர்கள் ஏற்பாட்டில் தண்ணீர் திருட்டுக்காக இந்த வேலை நடக்கிறது என அதன் உள்விவகாரத்தை நம்மிடம் கூறினார்கள் விவசாயிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT