தமிழக வரலாற்றில் முதல் முறையாக இலக்கியப் பாடல் தங்க ஏட்டில் பதிந்த நிலையில் கிடைத்துள்ளது.
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சிவதலம் திருவேடகம். பழமைவாய்ந்த இத்திருத்தலம் காசிக்கு நிகரான சிறப்புடையதாகும். இக்கோயிலின் மூலவர் ஏடகநாதேஸ்வரர் தாயார் ஏலவார்குழலி.
இத்தகு சிறப்புமிக்க திருவேடகம் கோயிலில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோயிலில் 'தங்க ஏடு' ஒன்றும் கோயில் வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஒரு சுவடிக்கட்டும் கண்டறிந்தனர்.
இது குறித்து சுவடித் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 45,000க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவையடுத்து தொடர்ந்து கள ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 200க்கும் அதிகமான கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் எனது வழிகாட்டலின் படி சுவடிக் கள ஆய்வாளர்கள் கோ.விசுவநாதன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்பொழுது தங்கத்தால் செய்யப்பட்ட 'தங்க ஏடு' ஒன்றைக் கண்டறிந்தனர். மேலும் கோயிலில் இருந்த ஓலைச்சுவடிக்கட்டு ஒன்றையும் கண்டறிந்தனர். அவற்றை ஆய்வு செய்த போது தங்க ஏட்டில் திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளதைக் கண்டறிந்தோம். மேலும் கோயிலில் இருந்த ஓலைச்சுவடியில் கோயில் வரவு செலவு விவரம் அடங்கிய தகவல்கள் இருப்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்தோம்.
இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ளதங்க ஏடு வரலாற்றுச் சிறப்புடையதாகும். இலக்கியப் பாடல் தங்க ஏட்டில் பதிந்த நிலையில் கிடைப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
தல புராணம்
இந்தத் தங்க ஏடு குறித்து திருவேடகநாதர் கோயில் தல புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, மதுரையை கூன்பாண்டியன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவனாக இருந்து வந்தான். அவன் மனைவி பெயர் மங்கையர்க்கரசி. அவள் ஒரு சிறந்த சிவபக்தை. சைவ சமயத்தை காப்பாற்ற எண்ணி அவள் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாள். மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் திருநீறு பூசி கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார். அதனைக் கண்டு அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று அனல் வாதம், புனல் வாதம் புரிய அழைத்தனர்.
அதன்படி, தமது சமய மார்க்கம் சார்ந்த கருத்துடைய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆனது. ஆனால், திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் இருந்தது. பின்பு புனல்வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டனர். அது ஆற்று நீரில் சென்றது. ஆனால் சம்பந்தர், "வாழ்க அந்தணர்......" என்று தொடங்கும் பதிகமுள்ள ஏட்டை வைகை ஆற்றில் விட்டார். அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது.
பாண்டிய மன்னனின் மந்திரியான குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஏட்டினைப் பின்தொடர்ந்து சென்றார். ஏடு ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. அதனை அறிந்த பாண்டிய மன்னன் ஏடு கரை ஒதுங்கிய இடத்திற்கு வந்து பார்த்தான். அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். பின்பு அங்கு ஒரு கோயில் எழுப்பினான். அக்கோயில் அருள்மிகு திருவேடகநாதர் கோயில் என்று அழைக்கப்பட்டது என்று தல புராணம் குறிப்பிடுகிறது.
திருஞானசம்பந்தர் "வாழ்க அந்தணர் ....." எனும் பதிகம் எழுதி நதியிலிட்டதன் நினைவாக அதே பாடலைத் தங்க ஏட்டில் எழுதி வைத்து கோயிலார் பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. தங்க ஏட்டில் மேற்சுட்டிய ஒரு பாடல் மட்டுமே உள்ளது. தங்க ஏடு எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு ஏட்டில் காணப்படவில்லை. எனினும் சுவடியிலுள்ள எழுத்தமைதி மூலம் ஏடு எழுதப்பட்ட காலம் சுமார் 100 ஆண்டுகள் இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் திருக்கோயில் சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களைப் பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், கூடுதல் ஆணையர், பதிப்பாசிரியர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.