Skip to main content

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பதவி விலகல்!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பதவி விலகல்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், 6 ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, திருத்திய ஊதியம் வழங்கவேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை 1.1.2016 முன் தேதியிட்டு அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்கள் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் செப்.07 ந்தேதி முதல் நடைபெற்று வரும், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு, இடையில் அமைப்பில் இருந்து விலகியது.

மாநில தலைமையின் தன்னிச்சையாக இம்முடிவிற்கு மாநிலம் முழுவதும் பரவலாக அந்த அமைப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் பலரும், அமைப்பில் இருந்து விலகி வருகின்றனர்.

பேராவூரணி கிளையின் முன்னாள், இன்னாள் பொறுப்பாளர்கள் வீர.சந்திரசேகரன், கபிலன், ஹாஜா முகைதீன், சிவராஜ், ,ராமச்சந்திரன், செ.இராமநாதன், பாலாஜி, ரஞ்சித் குமார், அருண் உள்ளிட்ட 21 பேர் அமைப்பிலிருந்து விலகியுள்ளனர்.

இதுகுறித்து த.தொ.ப.ஆ.கூட்டணியின் நிர்வாகிகள்  கூறுகையில், " மாநில தலைமையின் ஆசிரியர் நலனில் அக்கறை இல்லாத, தன்னிச்சையான போக்கை கண்டித்து ஏராளமானோர், அமைப்பிலிருந்து விலகியுள்ளோம். இன்னும் பலர் அமைப்பிலிருந்து விலக உள்ளனர்" என்றார்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்