
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் ஆகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதத்திற்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். 23, 24, 26, 27 என 4 நாட்கள் பேரவைக் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உறுப்பினர்களின் பதிலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பதில் அளிப்பார். மேலும் இந்த நிதியாண்டுக்கான இறுதி மதிப்பீடுகளையும் ஆய்வு செய்கிறார். இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் பொதுத்தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.