ADVERTISEMENT

பல்கலைக்கழக வளாகத்தில் வீலிங் செய்த மாணவர்... எதிரே வந்த சமையல் தொழிலாளி உயிரிழப்பு!

05:24 PM May 28, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாலை மற்றும் காலை நேரங்களில் முக்கிய சாலைகளில் மாணவர்கள் மாணவிகள் மத்தியில் கெத்து காட்டுவதற்காக இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று சக்கரத்தை தூக்கும் வகையில் சாகசம் என்ற தோரணையில் வீலிங் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் ஓட்டிச் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்னல் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பல்வேறு விதமான விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் தர்ஷன் (19) ஜேப்பியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்வி பயின்று வருகிறார். இவர் அதிக திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்துள்ளார். அப்போது இவருக்கு எதிரே வந்த சிவஜோதி நகர் கம்பர் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் ( 55 ) சமையல் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தின் மீது மாணவரின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு புருஷோத்தமன் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். அதேநேரத்தில் பெற்றோர்களும் பணம் உள்ளது என்பதற்காக மாணவர்களுக்கு அதிக திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தை அதிக விலை கொடுத்து வாங்கி கொடுப்பதால் அவர்களுக்கு அதனுடைய வலி தெரியாமல் மற்றவர்கள் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்தி உயிர்பலி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இந்த செயலுக்கு மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT