Skip to main content

மாணவர்கள் பைக் ஓட்டினால் நடவடிக்கை - அமைச்சர் உறுதி

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

fghj

 

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளிக்கு பைக்கில் வரக்கூடாது என்ற உத்தரவையும் மீறி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு பைக்கில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் சில இடங்களில் மாணவர்கள் பைக்கை அருகில் உள்ள கடைகளில் நிறுத்திவிட்டு பள்ளி முடிந்ததும் வீடுகளுக்கு எடுத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் கட்டுப்பாடு விதித்தும் மாணவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று பள்ளிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வருவது தொடர்பாகவும், பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்வதை பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், " மாணவர்கள் பேருந்தில் இடம் இருந்தாலும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இதுதொடர்பாக பேருந்து நடத்துநர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அதைப்போல மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர கூடாது. அப்படி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை பள்ளிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Due to the scorching heat, the two-wheeled vehicle is on incident

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து ஏதோ புகை வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு உடனடியாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி உள்ளார். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் கோடை காலங்களில் நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்ப காற்றும், வெப்ப சலனமும் தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக வீசிக் கொண்டிருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை,  திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை மையத்தினரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இந்த அதீத வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்றவை நடக்கத் தொடங்கியுள்ளன . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கோடை காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம், டீசல் நிரப்ப வேண்டாம் தினமும் ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து அதில் உள்ள காற்றை சிறிது நேரம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.