“நீட்”: வெளி மாநிலத்தவரின் வேட்டைக்காடானது தமிழ்நாடு: வேல்முருகன் குற்றச்சாட்டு

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-
கெட்ட உள்நோக்கத்தில் நுழைத்த “நீட்” தேர்வு, தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையுமே உள்ளடக்கியது என்பது உறுதியாகியிருக்கிறது.
மாநிலங்கள் இன்றி மத்திய அரசு ஏது? இந்த உண்மையைப் புறந்தள்ளி, மாநில உரிமையைப் பறித்தே மத்திய மோடி அரசு “நீட்”டை நுழைத்தது.
மாநிலங்களில் வேறுபட்ட பாடத்திட்டங்கள் இருந்தும் மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டது.
வினாத்தாளும் பொதுவாக இருக்கவில்லை; மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்தது; பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இலகுவாகவும் மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு கடினமாகவும் இருந்தது.
தேர்வு நடந்தபோது தேவையற்ற கெடுபிடிகள்! நூறு கல் தொலைவுக்கும் அப்பால் இருந்து ஐந்து நிமிடம், ஆறு நிமிடம் தாமதமாக வந்த மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
முழுக்கை சட்டைக்கு தடை போட்டதால் வெட்டி அரைக்கை ஆக்கினர் மாணவர்கள்.
காதில் கழுத்தில் அணிந்திருக்கக்கூடாது; மொபைல் வைத்திருக்கக்கூடாது என்றதால் அவற்றை யாரிடம் கொடுத்து வைப்பது என்று திண்டாடினர் பலரும்.
மாணவிகளின் உள்ளாடையையும் கழற்றச் செய்த கொடூரமும் நடந்தது.
தேர்வு முடிவோ மாநில பாடத்திட்ட மாணவர்கள் தலையில் இடியாய் இறங்கிற்று; வெறும் 8 விழுக்காட்டினரே தேர்ச்சி பெற்றனர். 196, 197 கட்-ஆஃப் பெற்ற மாணவர்கள்கூட தோல்வியுற்றனர்.
சிபிஎஸ்இ மாணவர்களோ 50 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர்; மேல்தட்டு மாணவர்களான அவர்களால் லட்சங்களைக் கொட்டி “நீட்” கோச்சிங் எடுக்க முடிந்ததுதான் காரணம்.
இப்படி கொட்டிக் கொடுத்து கோச்சிங் போக ஏழை எளிய கிராமப்புற மாணவர்களால் முடியுமா? நீட்டில் அவர்கள் தேறவில்லை.
நியாயமே இல்லாத “நீட்” அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை என்று ஆகிவிட, அதிலும் தில்லுமுல்லுகள், முறைகேடுகள்!
அதாவது “நீட்”படி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டதில், அதில் வெளி மாநில மாணவர்கள் 1458 பேர் இடம்பெற்றனர்; தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிர்வாக இடங்களே மொத்தம் 4731தான்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 189 பேர் கேரள மாணவர்கள்; இவர்கள் கேரள மாநில தர வரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தனர் என்கிறார்கள்.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த வெளி மாநில மாணவர்கள் 1269 பேர்; இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 188 பேர்; தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் 149 பேர்; வேறுபல மாநிலத்தவர் 932 பேர்.
இவர்கள் பெரும்பாலும் போலி இருப்பிடச் சான்று கொடுத்தே தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்தனர். இதுதான் “நீட்” அடிப்படையிலான இந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் நடைபெற்ற துணிகர மோசடி!
அப்படி போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இடம் பெற்ற 9 பேரைக் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர்களில் 4 பேர் இப்படி சட்டவிரோதமாகக் கைப்பற்றிய இடத்தை திருப்பித் தந்துவிட்டதாகவும் மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற மாநிலங்களில் இந்த மருத்துவ தரவரிசைப் பட்டியல் “நீட்” தேர்வுக்கான 9 இலக்க வரிசை எண்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் “நீட்”டின் 8 இலக்க பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதற்கான காரணத்தை தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
போலி இருப்பிடச் சான்றை வருவாய்த்துறை அலுவலர்கள் வாயிலாகத்தானே பெற்றிருக்க முடியும்; எப்படி முடிந்தது என்பதையும் தமிழக அரசுதான் தெரியப்படுத்த வேண்டும்.
இந்தத் தில்லுமுல்லுகள், முறைகேடுகளால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி இடங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
சமூக நீதியை ஒழித்துக்கட்டவே “நீட்”டைத் திணித்து தமிழக மாணவர்கள் மருத்துவம் படித்துவிடாதபடி செய்தார் பிரதமர் மோடி.
இதனாலேயே மருத்துவக் கல்வி இடங்களுக்காகக் குறி வைக்கப்படும் ஒரு வேட்டைக்காடாக மாறியது தமிழகம்.
இதில் வெளி மாநிலத்தவர் தில்லுமுல்லு செய்தே நமது மருத்துவக் கல்வி இடங்களை கபளீகரம் செய்தனர்.
இப்படியொரு அவலம் நேரக் காரணமே “நீட்”டை விலக்கத் திராணியில்லாமல், மாணவர் சேர்க்கையை மோடியிடம் எடப்பாடி அரசு கைமாற்றியதுதான் என்று குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
எனவே கடந்த 24ந் தேதி தொடங்கிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, தவறுகளைக் களைந்து புதிதாக கலந்தாய்வு நடத்த வேண்டும்; நடைபெற்ற முறைகேட்டிற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.