ADVERTISEMENT

“தமிழகத்தில் இதோடு 33 உயிர்கள் இதனால் பறிபோயுள்ளன” - தொடரும் உயிரிழப்பால் அன்புமணி வேதனை

11:09 AM Nov 28, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

செப்டம்பர் 26-இல் தமிழக அமைச்சரவை ஆன்லைன் சூதாட்டத்திற்கான அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரும் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இச்சட்டம் நேற்றுடன் 60 நாட்கள் முடிந்து காலாவதியானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காததால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடையில்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், ஓரிரு தினங்கள் முன் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70000 பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பெண்ணின் தற்கொலை குறித்தும் அவசரச் சட்டம் காலாவதியானது குறித்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒடிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-வது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும்தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களைப் பறிகொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை.

ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது.

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுநர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT