/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_121.jpg)
சென்னையில் மழை - வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால்,மழை - வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட நிதி மத்திய அரசால் இன்று வரை வழங்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மழை - வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை வந்த மத்தியக்குழு 4 நாள் ஆய்வுக்குப் பிறகு டிசம்பர் 14-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. ஆய்வு முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்போவதாக மத்தியக் குழு தெரிவித்திருந்தது. ஆனால், மத்தியக்குழு டெல்லி சென்று 20 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ததாக தெரியவில்லை. பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக உடனடி உதவியாக ரூ.7,033 கோடி, நிரந்தரப் பணிகளுக்கான உதவியாக ரூ.12,659 கோடி என மொத்தம் ரூ.19,692 கோடி நிதி வழங்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கோரிக்கை. உடனடி உதவி என்பது புயல் - வெள்ளம் பாதித்த ஒரு சில நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய உதவி ஆகும். ஆனால், ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த உதவியும் வழங்கப்படாததால் மழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேங்கிக் கிடந்த தண்ணீரை வெளியேற்றியது, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பிரிவினருக்கு ரூ.6000 நிதி வழங்கியது போன்றவற்றைத் தவிர வேறு எந்த நிவாரணப் பணிகளையும் தமிழக அரசால் செய்ய முடியவில்லை. நிலைமையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின்சமூகப் பொறுப்புணர்வு நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் லாபக் கணக்கை தணிக்கை செய்வதற்கு முன்பாகவே லாப ஈவுத்தொகையில் 90 விழுக்காட்டை இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க வேண்டும் என்று நிதித்துறை ஆணையிட்டுள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றின் சமூகப்பொறுப்புணர்வு பணிகளும் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். இவை அனைத்திற்கும் காரணம் மத்திய அரசின் நிவாரண உதவி உரிய காலத்தில் கிடைக்காதது தான்.
மத்தியக் குழு அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்து, அதன் பின்னர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடி, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. அதுவரை வெள்ள நிவாரணப் பணிகளை முடக்கி வைக்க முடியாது. எனவே, தமிழக அரசு கோரிய மழை - வெள்ள நிவாரண உதவியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். மத்தியக் குழுவின் அறிக்கையும், அதன் மீதான ஆய்வும் தாமதமாகும் என்றால், இடைக்கால நிவாரணமாகதமிழகஅரசு கோரிய உடனடி உதவியான ரூ.7,033 கோடியை உடனடியாக வழங்க மத்தியஅரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)