Skip to main content

வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்! - அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள் 

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்பின் உறவுகளே!
வணக்கம்!

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் பெரும்பாட்டன் வள்ளுவன். ‘நீரைச் சேமிப்பது ஓர் அரசனின் தலையாயக் கடமை; அதனைச் செய்தால் அறம், பொருள், இன்பம் இவை மூன்றும் அவ்வரசனுக்குக் கிட்டும்’ எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அந்நீர் சேமிப்பின் அருமையை உணர்ந்தே, அதனை அறமென செய்ய முனைந்தே நமது முன்னோர்கள் நீரைச் சேமித்து வைக்க ஏராளமான நீர்நிலைகளை உருவாக்கினார்கள்.

s

 

மூவேந்தர் பெருமக்கள் நாட்டையாண்டபோது நாடெங்கிலும் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு, அவைகள் சங்கிலித்தொடர் போல இணைக்கப்பட்டு நாள்தோறும் முறையாகப் பராமரிக்கப்பட்டு மக்களின் நீர்த்தேவையும், வேளாண்மைப் பாசனத்திற்கானத் தேவையும் நிறைவு செய்யப்பட்டது. ஆனால், தற்காலத்தில் நீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீர்நிலைகள் பராமரிப்பு, நீரின் இன்றியமையாமை இவை குறித்தெல்லாம் எவ்வித அக்கறையோ, அடிப்படைப் புரிதலோ எதுவுமற்ற திராவிட ஆட்சியாளர் பெருமக்கள் 50 ஆண்டுகாலமாகத் தமிழகத்தை ஆண்டதன் நீட்சியாகத் தமிழகம் வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்திருக்கிறது. அண்டை மாநிலங்களைவிட அதிகப்படியான மழைப்பொழிவைக் கொண்டிருக்கிறபோதிலும் தமிழகம் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது.

 

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம் எனப் பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து உட்புகுத்திவிட்டு தண்ணீர் தேவை குறித்தோ, வேளாண்மையின் அத்திவாசியம் குறித்தோ சிந்திக்காத கொடுங்கோல் ஆட்சியின் விளைவாகவே இத்தகைய கொடிய வறட்சியைச் சந்தித்து நிற்கிறோம்.

 

இவ்வறட்சியின் பிடியிலிருந்து மீண்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், இச்சூழலுக்கு ஏற்ப நம்ம தகவமைத்துக் கொண்டு உயிர்ப்போடு வாழவும் நம்மால் முடிந்த முன்னெடுப்புகளையும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது.

அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

 

==> பாத்திரங்களைக் கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பிக் கழுவுவோம்.

==> பழங்களையோ அல்லது காய்கறிகளையோ கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு அலசும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனைக் கொண்டு அலசுவோம்.

==> பல் துலக்கும்போதும், முகம் கழுவும்போதும் குழாயைத் திறந்துவிட்டுப் பயன்படுத்தாமல், ஒரு பாத்திரத்தில் நிரப்பிச் சிறுகசிறுகப் பயன்படுத்துவோம்.

 

==> குளிக்கும்போது நீர்த்தெளிப்பான் (ஷவர்) முறையில் குளிக்காது, வாளிகளில் நீரை நிரப்பிக் குளிப்போம். முடிந்தளவுக்கு ஒரு வாளி நீரில் குளியலை முடித்திட முயல்வோம்.

==> துணி துவைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தினால் இயந்திரம் முழுவதும் துணிகளை நிரம்பியப் பிறகு பயன்படுத்துவோம்.

==> அன்றாடம் துணிகளைத் துவைக்கும்போது கூடுதலான நீர் செலவாகும். அதனால், முடிந்தமட்டும் ஒரே முறையாக எல்லாத் துணிகளையும் துவைத்து நீரைச் சிக்கனப்படுத்துவோம்.

==> துணி துவைத்தப் பிறகு மீதமிருக்கும் நீரை வீணாக்காது அதனைக் கழிப்பறைகளில் ஊற்றப் பயன்படுத்துவோம்.

 

==> முடிந்த மட்டும் மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்தாது இந்நாட்டு முறை கழிப்பறைகளைப் பயன்படுத்துவோம். மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறபட்சத்தில், விசையின் மூலம் (FLUSH) நீரைப் பாய்ச்சாது வாளியின் மூலம் நீரை ஊற்றி சுத்தம் செய்வோம்.

==> ஒரு சொட்டுநீர்கூட வீணாகாது நீர்க்குழாயை நன்றாக மூடுவோம். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

==> நீர்க்குழாய் உபகரணங்கள் கசிந்தால் அவற்றின் பழுதை நீக்குவோம் அல்லது வேறு உபகரணத்தைப் புதிதாகப் பொருத்துவோம்.

 

==> உணவு உண்ணுவதற்கு முன்னும், பின்னும் கைகளைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது பாத்திரத்தின் உதவியுடன் கழுவுவோம்.

==> வாகனங்களைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது ஈரத்துணியை வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்வோம்.

==> மின் இயந்திரத்தின் மூலம் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றுவதாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் வரை நீரேற்றிவிட்டு மின் இயந்திரத்தை அணைத்துவிடுவோம். இதன்மூலம, அத்தொட்டிகளிலிருந்து நீர் கொட்டி வீணாவதைத் தடுக்கலாம்.

 

==> நீரின் சிக்கனத்தை மிக நன்றாக உணர்ந்திருக்கிற இத்தருணத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நமது சுற்றத்தார், உறவுகள் என யாவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலம் நீர் வீணாவதைத் தடுப்போம்.

மேலே கூறப்பட்டிருப்பவைகளை ஒவ்வொருவரும் அவசியம் பின்பற்றுங்கள். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஒத்துழையுங்கள். அதுகுறித்த கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு போய் சேருங்கள். நிச்சயமாக, இக்கடினச் சூழலையும் நம்மால் கடக்க முடியும். ஆகையினால், நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இவ்வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்