ADVERTISEMENT

தரமற்ற பெரம்பலூர் குடிசை மாற்று வாரிய கட்டடம்... ஆட்சியர் நேரில் ஆய்வு! 

12:25 PM Aug 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் குடிசை மாற்று உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் இன்று (20.08.2021) தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரம் ஆகியிருக்கும் நிலையில், இதுகுறித்து நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூரிலும் இதேபோல் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பில் தொட்டாலே கொட்டும் அளவிற்கு சிமெண்ட் பூச்சுகள் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி நிறைவடைந்து இந்த ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்தக் குடியிருப்பும் தரமற்று இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வேங்கடபிரியா மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அந்தக் குடியிருப்பில் உள்ள பழுதுகளை சரிசெய்ய மாவட்ட ஆட்சியர் வேங்கடபிரியா குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனையடுத்து கட்டடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரருக்கான கடைசி பில் 2 கோடி ரூபாய் நிறுத்திவைக்கப்பட்டதாக குடிசை மாற்று வாரிய அதிகாரி அழகு பொன்னையா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT