ADVERTISEMENT

போலீஸ் கஸ்டடியில் கொள்ளையன் முருகனா? இல்ல முருகன் கஸ்டடியில் போலீசா? 

07:31 PM Oct 20, 2019 | kalaimohan

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள், பொருட்கள் வாங்க மக்கள் திருச்சியின்முக்கிய கடைவீதியான மெயின்கார்கேட் பகுதிகளில் குவிவார்கள். இதனால் அங்கு கூட்ட நெரிசலாக காணப்படும். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி திருச்சி என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார். இதில் துணை கமிஷனர் நிஷா, மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்,

ADVERTISEMENT


நகை கடையில் நடந்த கொள்ளையில், கொள்ளையர்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளனர். கடை முன், பின் காம்பவுண்ட் இருந்ததால் கொள்ளையர்கள் சுவரில் ஓட்டை போட்டு சென்றது யார் பார்வைக்கும் தெரியாமல் போனது. இதில் நேரடியாக மூன்று பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர். இந்த குற்றத்துக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் விசாரணையை முடித்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தருவோம்.

இவர்கள் திருச்சி பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். வேறு சில வழக்குகளிலும் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருகிறோம். பெங்களூரு போலீசார் கோர்ட் உத்தரவின்படி முறையாக வந்துதான் முருகனை 6 நாள் கஸ்டடி எடுத்துச்சென்றனர். பெங்களூருவில் முருகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. நாங்களும் முருகனை கஸ்டடி எடுக்க திருச்சி ஜே.எம். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுவிட்டோம். அந்த கடித நகலை கர்நாடகா பரப்பனஅக்ரஹாரா சிறையில் அளித்து விட்டோம். விரைவில் அவனை கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளோம்.

ADVERTISEMENT

பெங்களூர் போலீசாருக்கும், திருச்சி போலீசாருக்கும் எந்தவித மனஸ்தாபமும் இல்லை. பெங்களூரு காவல் துறையினர் திருச்சி தனிப்படை காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினர். நாங்களும் அதுபோல் ஒத்துழைப்பு அளித்தோம். அவர்கள் சட்டப்படியே திருச்சியில் முருகன் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு சென்றனர். முருகனிடமிருந்து இன்னும் 100 சதவீதம் நகைகள் கைப்பற்றப்படவில்லை. மீதி நகைகள் எங்கே உள்ளது என முருகனை கஸ்டடி எடுத்து விசாரித்ததால் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.


இது குறித்து நாம் பெங்களுர் போலிஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, கர்நாடக போலீஸ் கஸ்டடியில் இருக்கும் கொள்ளையன் முருகனை தொடர்ந்து இரண்டாவது முறையாக தொடர் கஸ்டடி எடுத்து விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருச்சி நீதின்றம் கொடுத்த கஸ்டடி அப்படியே இருக்கும் நிலைதான் இருக்கிறது. காரணம் ஏற்கனவே பெங்களுர் போலீஸ் கடந்த வருடத்தில் கஸ்டடி எடுத்தபோது 90 நாட்களுக்கு மேல் கஸ்டடி வைத்து 3 கோடி மதிப்புள்ள நகைளை மீட்டனர். 90 நாள் தொடர்ச்சியாக போலீஸ் கஸ்டடியில் இருந்த முருகன் தான் தற்போது பெங்களுர் போலீஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு செல்ல பிள்ளையாகிவிட்டான். இதனால் இந்த முறை 2019 ஜனவரி முதல் தொடர்ச்சியாக 3 முறை கொள்ளை முயற்சி தொடர் தோல்வி, அதன் பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி 5 கோடி, பிறகு லலிதா ஜீவல்லரியில் 28 கிலோ தங்கம் எடுத்து பிரச்சனை ஆனா போது பெங்களுர் போலீசில் தஞ்சம் அடைந்து இந்த முறையும் தொடர்ச்சியாக கஸ்டடியை நீடித்துக்கொண்டே இருந்தால் முருகன் தமிழக போலீசுக்கு கஸ்டடி கிடைப்பது எட்டாக்கனி தான் என்கிறார்கள் விவரம் அறிந்த காவல்துறையினர்.

தமிழகம் மற்றும் பெங்களுர் போலீசுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் கொள்ளையன் முருகன் போலீஸ் கஸ்டடியில் இல்லை முருகன் கஸ்டடியில் தான் போலீஸ் இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT