Skip to main content

மெரினா கடற்கரையில் காவலர் மீது தாக்குதல்: தப்பி ஓடிய இருவருக்கு போலீஸ்சார் வலை

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
மெரினா கடற்கரையில் காவலர் மீது தாக்குதல்: 
தப்பி ஓடிய இருவருக்கு போலீஸ்சார் வலை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் பிரச்சினைக்கு மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்கள் வெளியாவதால், சந்தேகப்படும்படியாக கும்பலாக வருவோரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

சமீபத்தில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனால், மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் பைக்கில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்யா, அவர்களை தடுத்து நிறுத்தி அந்த சாலையில் செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பைக்கில் வந்த நபர்கள் இரண்டு பேரும் காவலர் சத்யாவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த காவலர் சத்யா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்