Skip to main content

"எடப்பாடி சொல்வதை நம்ப முடியாது, எழுதித் தர வேண்டும்’’ - ராமதாஸ்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
rs

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

 

இது குறித்த அவரது அறிக்கை: ’’தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 13 அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொண்ட பிறகு தான் இப்படி ஒரு  முடிவுக்கு அரசு வந்திருக்கிறது.  தமிழக அரசின் அறிவிப்பு  மேலோட்டமாகப் பார்க்கும் போது திருப்தியளித்தாலும், நம்பிக்கையளிப்பதாக இல்லை. இது போராடும் மக்களை எந்த வகையிலும் சமாதானப்படுத்தாது.

 

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட பணிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,‘‘ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு இனி எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப் படாது. இதை ஏற்று பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். தமிழக அரசின் கடந்த கால செயல்பாடுகளையும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது பினாமி ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. அதனால் தான் போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் அறிவிக்கவில்லை.

 

ஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் திட்டம் தங்களிடம் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்கு 45 நாட்களுக்கு ஆலை மூடப்படும். இப்போது சற்று கூடுதலாக மூடப்பட்டுள்ளது. ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை தமிழக அரசு புதுப்பிக்கவில்லை. அதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடந்துள்ளோம். அந்த வழக்கு ஜூன்  மாதம் 6&ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல தீர்ப்பை வாங்கி ஆலையை திறப்போம்’’ என்று ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை செயல் அதிகாரி ராம்நாத் அறிவித்திருக்கிறார். கடந்த காலங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. அப்போதெல்லாம்  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அதன் பண பலத்தை பயன்படுத்தி ஆலையை ஒரு சில வாரங்களில்  திறந்திருக்கிறது. இத்தகைய கடந்தகால வரலாறுகளை அறிந்த எவரும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற முதலமைச்சர் பழனிச்சாமியின் வாய்வழி அறிவிப்பை நம்ப மாட்டார்கள்.

 

அதுமட்டுமின்றி, இந்தியாவில் அரசின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பெரு நிறுவனங்கள் தான் தீர்மானிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எந்தவொரு  கொள்கை முடிவையும் மத்திய அரசு அனுமதிக்காது. இந்தியாவின் நீதித்துறை கூட பெருநிறுவனங்கள்  மீது பாசத்துடன் தான் நடந்து கொள்ளும். அதனால் தான் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்ட பிறகும், ஆலையை மூடாமல் ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டு ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை மூட மாட்டோம் என்று ஆலை நிர்வாகம் கூறுகிறது. ஆலையை மூட வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால் கூட, அதை மத்திய அரசு விரும்பாது. அத்தகைய தருணங்களில் மத்திய அரசு அளிக்கும் அழுத்தத்தை தாங்கும் திறன் எடப்பாடி அரசுக்கு இல்லை. இப்போது ஆலையை மூடப்போவதாகக் கூறும் பினாமி அரசு, மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்துக்கு பணிந்து ஆலைக்கு அனுமதி அளிக்கத் தயங்காது. மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளிக்குமா? 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தால் அவர் முதலில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அவரது கருத்துக்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் நிலவும் பதற்றத்தைப் போக்குவதற்காக அவர் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. இதைக்கூட செய்யாத எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவதை பொதுமக்கள் நயவஞ்சகமான ஒன்றாகவே பார்ப்பார்கள்.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும். பினாமி பழனிச்சாமி உடனடியாக தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்தித்து பேச வேண்டும். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இது ஒன்று தான் வழியாகும்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.