ADVERTISEMENT

காவிரி படுகையில் உரிமம் பெறாத ஒ.என்.ஜி.சி கிணறுகளை மூடவேண்டும்: அன்புமணி

02:52 PM Mar 02, 2018 | rajavel


ADVERTISEMENT



காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் அனைத்தும் சட்டவிரோதமாக செயல்படுகின்றன என்று ‘காவேரி டெல்டா வாட்ச்’ என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தகவல் உரிமைச் சட்ட பதில்கள் மற்றும் இணைய ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மைகள் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. சுற்றுச்சூழலையும் வேளாண்மையையும் அழிக்கும் உரிமம் பெறாத ஒ.என்.ஜி.சி கிணறுகள் அனைத்தையும் உடனடியாக மூடவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

ஓ.என்.ஜி.சி ஹைட்ரோகார்பன் கிணறுகள் தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓ.என்.ஜி.சி சொல்கிறது. 71 ஓ.என்.ஜி.சி கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்கள் சொல்கின்றன.

ஆனால், அவை எவற்றுக்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை. அதேநேரத்தில் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓ.என்.ஜி.சி சொல்கிறது. ஆய்வுக்கான கிணறாக இருந்தாலும் சரி, உற்பத்தி செய்யும் கிணறாக இருந்தாலும் சரி, ‘இயங்குவதற்கான ஒப்புதலை(Consent to Operate) ஓ.என்.ஜி.சி காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின்படி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி எந்த கிணற்றுக்கும் இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை.

அதாவது, தமிழ் நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் கொடுத்த தகவல்கள்படி டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோகார்பன் கிணறுகளில் ஒன்றுக்கு கூட முறையான சுற்று சூழல் உரிமம் இல்லை என்று அம்பலமாகிறது. இது போன்று உரிமம் இல்லாமல் இயங்கிய கதிராமங்கலம் கிணற்றின் எண்ணெய் கசிவை எதிர்த்து போராடிய மக்களைத்தான் காவல்துறை துன்புறுத்தி சிறையில் அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள கிணறுகள் சட்ட விரோதமானவை எனும் போது, அவற்றை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதுடன், சட்டவிரோத கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசும், காவல்துறையும் ஈடுபட்டுள்ளன. இதற்கான சிறந்த உதாரணங்களில் ஒன்று திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் எண்ணெய்க் கிணறுகள் ஆகும். மக்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி துடிப்பதால் தான் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பொதுமக்களையும், ஓ.என்.ஜி.சி அதிகாரிகளையும் அழைத்துப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசோ அந்தக் கடமையை செய்யாமல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஏவல் அமைப்பாக மாறி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை மிரட்டி வருகிறது. எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவக்துறை ஆகிய அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளுக்கு துணைபோகாமல் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் விளை நிலங்களையும், விவசாயிகளையும் காப்பாற்றும் நோக்கத்துடன்....

1. சுற்றுச்சூழலையும் வேளாண்மையையும் அழிக்கும் உரிமம் பெறாத ஒ.என்.ஜி.சி கிணறுகள் அனைத்தையும் உடனடியாக மூடவேண்டும்.

2. டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி செயல்பாடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3. இத்தகைய சட்ட மீறல்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் எப்படி அனுமதித்தது என்பது குறித்து புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. அப்பாவி டெல்டா விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் வாங்கவேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT