Skip to main content

சுவாசக்கருவி இன்றி 4 மணி நேரம் சுவாசித்தார் குரு: மருத்துவர்களுடன் அன்புமணி ஆலோசனை

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
Kaduvetti_J._Guru

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்எல்ஏ குரு சுவாசக்கருவி இல்லாமல் சுவாசிக்க வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் பயனாக அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று மொத்தம் 4 மணி  நேரம் சுவாசக் கருவி இல்லாமல் மாவீரன் குரு சுவாசித்தார்கள். 
 

மாவீரன் குரு அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்தார். 
 

தொடர்ந்து  அவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்படி குருவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.