ADVERTISEMENT

இந்தியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவு கல்லூரி இங்குதான் உருவாகிறது - அமைச்சர் ஐ. பெரியசாமி

06:40 PM Dec 07, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "தமிழக முதல்வர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில்,செயல்பட்டு வருகிறார். கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் புதிதாக அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளில் கட்டணம் மிகவும் குறைவுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் உயர் கல்வி மேம்பாட்டிற்காக 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும், பழனியில் ஒரு சித்த மருத்துவக்கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சியில் உள்ள சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கும் விரைவில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

கிராமப் பகுதிகள் சூழ்ந்த பின்தங்கிய பகுதியில் தற்போது அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது. எளிய மக்கள், விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி பெற வேண்டும், நிதி பற்றாக்குறையால் அவர்களின் கல்லூரி கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த அரசின் லட்சியம். தேவைக்கேற்ப இன்னும் பல கல்லூரிகள் தொடங்கப்படும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் விரைவில் 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளன.

முதல்வர், கூட்டுறவுத்துறையில் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவுத்துறையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் தற்போதுவரை ரூ.8,300 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 3 மாத காலத்திற்குள் கடந்த ஆண்டை விடக் கூடுதலாகக் கடன் உதவிகள் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் 6,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடன் இந்தப் பணி நியமனம் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் உறுதுணையாக இருப்பேன். இங்கு அமையப்போகும் இந்தக் கூட்டுறவு கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த கூட்டுறவு கல்லூரியாக உருவாகப் போகிறது" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT