
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த, ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான மகளிருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு பயனாளிகள் 120 பேருக்கு 20 லட்சம் உதவித்தொகைகளை வழங்கினார்.
அதன்பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு அறிவித்தது. அதன் பிறகு சில காரணங்களால் மேலும் தணிக்கைக்குழு தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்கள் விவரங்களைத் தணிக்கை செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பயனாளிகளுக்கும் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்த நகைகள் வழங்கப்படும். பாச்சலூர் பள்ளி மாணவி உயிரிழப்பு யாரும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பல்வேறு தரப்பினர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியதை அடுத்து, தமிழக முதல்வர் உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது சிபிஐ விசாரணை என்பது தேவையில்லை. சிபிஐ விசாரணைக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றிவருகிறார்கள். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்குஇணையான காவல்துறை. ஆகவே தமிழக காவல்துறை உரிய விசாரணை நடத்தி கண்டிப்பாகக் குற்றவாளிகளைக் கைது செய்வார்கள். மேலும், கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களை அழித்துவருகிறது. யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். அதன்படி தமிழக வனத்துறை அமைச்சருடன் பேசி நிரந்தரமாகக்குழுவை அமைத்து பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு யானைகளை அடர்ந்த வனத்துக்குள் அனுப்பி விவசாயத்தைப் பாதிக்காத வண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கு தற்போது முயற்சி செய்துவருகிறோம்'' என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)