Skip to main content

விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவன்... தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு... காவல்துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

madurai

 

மதுரை திருமங்கலம் அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன், மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவத்தில் போலீசாரே காவல்நிலையத்தில் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கிராம மக்கள் 7 மணி நேரமாக உடலை அப்புறப்படுத்த விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இதயக்கனி (வயது 25) என்பவருக்கும் அதே கிராமத்தைச் சார்ந்த புனிதா (20) என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. அன்று முதல் இருவரும் கிராமத்தில் இருந்து வெளியேறி மாயமாகினர். இந்நிலையில் புனிதாவின் பெற்றோர்கள் சாப்டூர் காவல்நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை எனப் புகார் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவம் அறிந்து இதயக்கனியை தேடி வீட்டுக்கு வந்தனர். அங்கு இதயக்கனி இல்லை, பின்பு நேற்று காவல்துறையினர் இதயக்கனி வீட்டிற்கு வந்து அவரது சகோதரரான கல்லூரி மாணவன் ரமேஷை (19) விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரவு முழுவதும் ரமேஷ் வீடுதிரும்பாத நிலையில், கிராமத்திலுள்ள 150 மீட்டர் உயரமுடைய மலையில் உள்ள மரத்தில் கயிற்றில் தொங்கியபடி ரமேஷ் உடலைக் கண்ட அக்கிராம மக்கள் உடனடியாக ரமேஷ் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஒன்று திரண்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விசாரணைக்குச் சென்ற ரமேஷை கொலைசெய்த காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். காவல்நிலையத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் ஜெயக் கண்ணன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யும் வரை ரமேஷின் உடலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று கூறி 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Ad

 

இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, பேரையூர் பகுதி அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கல்லூரி மாணவனைக் காவல்துறையினரே கொலை செய்திருக்கலாம் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சம்பவம் பெரும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்