Skip to main content

சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. மற்றும் சுயேட்சை  வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 

 

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயமில்லை. 

 

கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கமலாலயத்தின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

tamilnadu bjp office incident police investigation

பா.ஜ.க. அலுவலகம், அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் காவல்துறையின் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நீட் தேர்வை ஆதரித்து அண்ணாமலை பேசியதைக் கண்டித்து பெட்ரோல் குண்டு வீசியதாகத் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

 

இதனிடையே, நாகை மாவட்டம், திருப்பூண்டியில் பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராம் என்பவரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த கீழையூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஆய்வு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காருக்கு தீ வைத்தது யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கட்சி பதவியில் இருந்து நீக்கம்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
BJP District President Agoram removed from party post

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி(21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர்.

மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பாஜக பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர்  வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் எனத் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக நிர்வாகியை தாக்கிய வழக்கில்  திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'அனைத்து பால் கேன்களுக்கும் ஜிஎஸ்டி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'GST for all milk cans' - Nirmala Sitharaman announcement

டெல்லியில்  53 வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கேன்கள் மட்டுமல்லாது அட்டைப்பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவைகளை பொறுத்தவரை நடைமேடை சீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நடைமேடை சீட்டு, பொருட்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்கும் விடுதி கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்தாலும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருந்தாலும், மாணவர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக அங்குத் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாகவும் மாநில நிதி அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.