Skip to main content

'நெஞ்சம் பதைக்கிறது; உறுதுணையாக உடன் நிற்போம்' - முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட் 

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

nn

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்; பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண், சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

nn

 

மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்