Skip to main content

“பெயருக்குப் பின்னால் சாதிய போடாமல் இருப்பதே ஒரு அரசியல் தான்” - வசந்த பாலன்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
vasantha balan political speech

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த பாலன் இப்போது ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸீன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரையிலர் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது வசந்த பாலன் பேசுகையில், “மூன்று வருடங்களுக்கு முன்பு, அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பார்க்கும் போது தமிழ்நாடு எவ்ளோ முன்னேறி இருக்கிறது எனத் தெரிகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி, மருத்துவம், சாலை வசதி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த 50 ஆண்டுகாலம் நம்மை வழிநடத்திய பெரியாரிய, மார்க்சிய. அம்பேத்கரிய அரசியல் இந்த இடத்தில் கொண்டு வந்து நிருத்திருக்கிறது. பிறந்த குழந்தை வயித்துக்குள்ள இருக்கிறதுலயிருந்து சாகபோறவரைக்கும் அவன் வளருவதற்கான சட்டங்களை இந்த அரசாங்கம் வகுத்திருக்கு. அடுத்து அந்தப் பதவிக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும், ஒவ்வொருத்தருக்குமான ஒரு அரசியல் பாதுகாப்பை ஒரு அரசாங்கம் வழங்கியிருக்கு. அதில் ஊழல் இருந்தாலும் பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியிருக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கு.     

இன்னும் இந்த அரசியலை கூர்ந்து பார்க்கும் போது, இந்த உலகத்தில் ஜனநாயகத்தை விட, சிறந்த ஆட்சி முறை எதுவும் இல்லை எனத் தோன்றியது. ஜனநாயகத்தை கட்டமைக்க வேண்டும் என்றால், ஊழல் நிறைந்ததாகத் தான் இருக்கும். ஆனால் மக்களுக்கு நலன் போய் சேரும். எப்படி எனக் கேட்டால், எதிர்காட்சி வலுவாக இருக்கும். இந்தக் கட்டமைப்பை ஒவ்வொரு முறையும் தவறவிடாமல் காப்பாத்திக்க வேண்டும். ஜெயிப்பவர்களை மட்டுமில்லை, எதிர்கட்சியாக உட்காருபவர்களுக்கும் சேர்த்து ஓட்டு போட வேண்டும் என்ற அரசியலை ஒரு படம் சின்னதாக பேசினால் போதும். இங்கயிருக்கிற கலை, இலக்கியம், பத்திரிகைகள் எல்லாமும் சேர்ந்து ஒரு மனிதனை அரசியல் மையப்படுத்தினாலே அவன் ஒரு கட்டத்தில் போய் நிற்பான். நம்முடைய 70 ஆண்டுகால அரசியல், ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய பேருக்கு பின்னால் சாதிய போடாமல் இருப்பதே ஒரு அரசியல் தான். மத்தவங்களை என்ன சாதின்னு கேட்காமல் இருப்பதும் ஒரு அரசியல் தான்” என்றார்.       

சார்ந்த செய்திகள்