Skip to main content

பசுமைவழிச் சாலை: பாதிக்கப்படும் பகுதிகளில் பாமக மக்கள் சந்திப்பு! - ராமதாஸ்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018


பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழ்நாட்டில் யார் குடி எங்கு கெட்டாலும் பரவாயில்லை... எஜமானர்களின் ஆணைப்படி எட்டு வழி சென்னை - சேலம் பசுமைவழி சாலையை நிறைவேற்றியே தீருவது என வெறி கொண்டிருக்கும் பினாமி அரசு, அதற்காக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறைகளும், அதிகார அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தை சாகடிக்கும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திண்டிவனம் - கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

பசுமைவழி சாலையை எதிர்ப்பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் அலறுவது கேலிக்கூத்தானது. ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பாமக நடத்தவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்