Skip to main content

ரஜினியின் 2.0 டிக்கெட் விற்பனையை கண்காணிக்க சிறப்புக்குழு; மக்கள் மன்றம் அதிரடி!

Published on 22/11/2018 | Edited on 22/11/2018

 

rm


ரஜினி நடிப்பில் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ள 2.ஓ பட டிக்கெட் விற்பனையை கண்காணிக்கவும், திருட்டு டிவிடிக்கள் வெளியாவதைத் தடுக்கவும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.


சேலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 22) நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட புதிய செயலாளராக செந்தில்குமார், கடந்த அக். 23ம் தேதி அறிவிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதை அடுத்து நடைபெறும் முதல் கூட்டம் என்றாலும், நிகழ்வு நடந்த கல்யாண மண்டபம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. 

 

ra


ஒன்றிய, மாநகர, மண்டல செயலாளர்கள், சார்பு அணி, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மேடையில் அமர இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மேடையில் இடம் பிடித்திருந்த ஒரே ஒரு பெண், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி மட்டும்தான்.


மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், கூடுமானவரை அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அனைவரின் பெயர்களையுமே குறிப்பிட்டுப் பேசினார். மறைந்த முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர் சக்திவேல், இப்போதைய இணை செயலாளர் பழனிவேலு ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டதோடு, தான் கிளை மன்றத் தலைவராக இருந்தபோது அவர்கள் தன்னிடம் காட்டிய அன்பையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பேசினார். 


''எல்லோரின் உடம்பிலும் ஓடும் ரத்தம் வேண்டுமானால் வேறு வேறு குரூப் ஆக இருக்கலாம். ஆனால் நாமெல்லோருமே 'ஆர்' என்ற ஒரே குரூப் மட்டும்தான். ரஜினி என்பதைக் குறிக்கும் வகையில் அவர் 'ஆர்' குருப் என்றார். அப்படிச் சொல்லும்போது அரங்கத்தில் கரவொலி அடங்க வெகுநேரமானது. நமக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் ரஜினியை முதல்வராக்க பாடுபட வேண்டும். 

 

r


ரஜினிக்கு வரும் டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் வருகிறது. அவர் அரசியலுக்கு வருவதாகச் சொன்னபிறகு வரக்கூடிய முதல் பிறந்த நாள். அதனால் டிசம்பர் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள் எப்படி அச்சிட வேண்டும் என்பதற்கு தலைமை நிர்வாகம் சில அறிவுரைகள் வழங்கி இருக்கிறது. அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.


வரும் 29ம் தேதி, 2.ஓ படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்தப்படம் மாபெரும் வெற்றிபெற உழைக்க வேண்டும். என்ன விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட விலைக்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது. அவற்றைக் கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும். அதேபோல், 2.ஓ படத்தை இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்கவும், திருட்டு டிவிடிக்கள் வெளியாவதைத் தடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்படும்,'' என்றார் செந்தில்குமார். 


ரசிகர்களும் குடும்பத்துடன் சென்று 2.ஓ படத்தை திரையரங்குகளில் பார்க்கும்படி கேட்டுக்கொண்ட செந்தில்குமார், யாராவது வீடுகளில் இணையத்திலோ, டிவிடியிலோ படத்தைப் பார்த்தால் அதுபற்றி உடனடியாக மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.


ஓமலூர் ஒன்றியத்தில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, ரஜினி மக்கள் மன்றத்தில் இணையும் நிகழ்ச்சியும் நடந்தது, இக்கூட்டத்தின் மற்றுமொரு ஹைலைட்.


ஒவ்வொருமுறை ரஜினி நடித்த படம் வெளியாகும் போதெல்லாம் அவரின் அரசியல் வருகை குறித்து பேச்சு எழுந்து அடங்கும். ரஜினியின் படங்களை ஓடவைப்பதற்காக பின்பற்றப்படும் உத்தியாகவே அத்தகைய அரசியல் பேச்சுகள் உலவ விடப்படுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில் புதிய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ள செந்தில்குமார், தன்னை அனைத்து நிர்வாகிகளிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளவும், ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடவும், 2.ஓ பட டிக்கெட் விற்பனை குறித்தும் பேசி ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் சிலர், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு கமெண்டுகளை பறக்கவிடவும் தவறவில்லை. 


 

சார்ந்த செய்திகள்