ADVERTISEMENT

திறந்தவெளிகளில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள்... மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!! 

12:05 PM Jun 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசு காப்புக் காடுகள் அமைந்துள்ளன. இந்தக் காப்புக்காடு பகுதியில், நகரப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், காப்புக்காட்டில் உள்ள மரக்கிளைகளில் கரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் முழு கவச உடைகள், முகக் கவசங்கள் ஆகியன தொங்கிக்கொண்டிருக்கின்றன. மேலும் சில இடங்களில் மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக கிடக்கின்றன.

அத்துடன் ப்ளாஸ்டிக் கழிவுகள், படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஆகியவை கொட்டப்படுகின்றன. அதுமட்டுமின்றி விருத்தாச்சலம் நகரக் குடியிருப்பு பகுதியில் அள்ளப்படும் கழிவுகள் காப்புக்காடு அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் காப்புக்காட்டில் வசிக்கும் குரங்கு, மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் மருத்துவக் கழிவுகளையும், குப்பைகளையும் தீவைத்து எரித்துச் செல்வதால், அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறி காற்று மாசுபாடும், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன.

மேலும், கடந்த சில மாதங்களாக குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. திறந்தவெளியில் குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதால் நோய்த் தொற்று பரவும் என்று மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். எனவே குப்பைகளையும் மருத்துவக் கழிவுகளையும் திறந்தவெளியில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதனிடையே மருத்துவக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016 அறிக்கை செய்துள்ளது. இவ்விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகள் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க இயலும். மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும் தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள்வதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் சாலைகள், ஆற்றங்கரைகள், நீர்நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன. தற்போது நிலவும் கோவிட்-19 நோய்த் தொற்று சூழலில் மருத்துவக் கழிவுகளை முறை இல்லாமல் திறந்தவெளியில் கொட்டுவது பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே அனைத்து மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் ஆகியவற்றில் மருத்துவக் கழிவுகளை முறையாக சேமித்து, அந்தந்தப் பகுதியில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதித்துள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்க்க உறுதிசெய்ய வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT