cuddalore incident

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி செம்பாயி (30). இவருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகளான நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இவரை அதே பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன் (42), என்பவர் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று அப்பகுதியில் உள்ள தீவனத் தோட்டம் என்ற இடத்தில் பாலியல் வன்முறை செய்துள்ளார்.

இதனால் அவர் கூச்சல் போட்டதில் அப்பகுதியினர் ஓடிவந்து தடுப்பதற்குள் ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து செம்பாயியின் தாய் அரசி செம்பாயிடம் கேட்டபோது தன்னை ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடி விட்டார் என கூறியுள்ளார். தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என அரசி அவரிடம் சமாதானம் கூறி, வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்திருந்த செம்பாயி நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக தூக்கிட்டு கொண்டுள்ளார்.

Advertisment

இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிர் இறந்தார். இதுகுறித்து செம்பாயியின் தாய் அரசி கொடுத்த புகாரின்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செம்பாயி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது கையால் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், 'என்னை வன்கொடுமை செய்த ராஜேந்திரனை ஆவியாக வந்து பழி வாங்குவேன்...' என குறிப்பிட்டுள்ளார். செம்பாயி எழுதிவைத்த கடிதம் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் செம்பாயின் இறப்புக்கு ராஜேந்திரன்தான் காரணம் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் சின்னக்குட்டி என்கிற ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.