ADVERTISEMENT

மகன் சடலத்தை பார்த்ததும் உயிரிழந்த தந்தை... வேறு வழி தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்ட விவசாயி!!

01:04 PM Jun 15, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மேலந்தல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காசிநாதன் (30). விவசாயம் செய்துவந்த இவர் நேற்று முன்தினம் (13.06.2021) அதிகாலை தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்படி செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கைக் காட்டு விலங்குகள் நோண்டி தின்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என தனது மரவள்ளிக்கிழங்கு நிலத்தைச் சுற்றிலும் காட்டு விலங்குகளைத் தடுப்பதற்காக மின்சார வேலி அமைத்திருந்தார்.

இதுகுறித்து விபரம் அறியாத அப்பாவி காசிநாதன் அந்த வழியாக தனது வயலுக்குச் செல்லும்போது பாஸ்கரின் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது நிலத்திற்கு வந்த பாஸ்கர் தன் நிலத்தில் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காசிநாதன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை மறைப்பதற்காக காசிநாதன் சடலத்தைத் தூக்கிச் சென்று காசிநாதனின் கரும்பு தோட்டத்தில் போட்டுவிட்டு வந்துள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக காசிநாதன் சடலத்தின் மீது பூச்சி மருந்தும் தெளித்துள்ளார் பாஸ்கரன். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

எப்படியும் காசிநாதன் இறந்தது வெளியே தெரியும். நம் மின்சார வேலியில் சிக்கி இறந்தார் என்பதைப் போலீசார் கண்டுபிடித்துவிட்டால் நாம் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும் என்று அவரது மனசாட்சி உறுத்தியது. இதனால் பயந்துபோன பாஸ்கர், மணலூர்பேட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். காசிநாதன் தனது வயலில் அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்தது குறித்து விவரமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பாஸ்கர் அழைத்துச் சென்று காசிநாதன் கரும்பு தோட்டத்திற்கு அவரது சடலத்தைத் தேடி கைப்பற்றினார்கள். இந்த தகவல் அறிந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணியம் தன் மகன் இறந்துபோன தகவல் கிடைத்ததும் மகன் சடலமாக கிடந்த கரும்பு தோட்டத்துக்கு ஓடி வந்துள்ளார்.

மகன் சடலமாக கிடப்பதைப் பார்த்த சுப்பிரமணியம் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பதறிப்போன அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காசிநாதனின் தாய் ராஜாமணி மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காட்டு விலங்குகளுக்கு அமைக்கப்படும் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் வடமாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT