Skip to main content

காலதாமதமான பிரேதப் பரிசோதனை... பொது மக்களின் சாலை மறியலுக்கு பின்பு நடவடிக்கை! 

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
Late autopsy; Action after the public road blockade

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது செங்குறிச்சி. இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகப்பன் - சிவசக்தி (22) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது சாய் கிருஷ்ணா என்ற இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அழகப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது மனைவி சிவசக்திக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது. குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு கணவரிடம் பலமுறை வலியுறுத்திவந்துள்ளார் சிவசக்தி. ஆனால் அழகப்பன் குடிப்பழக்கத்தைக் கைவிடவில்லை, வழக்கம்போல் நேற்றும் (20.06.5021) அழகப்பன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

 

இதனால் வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனம் வெறுத்துப்போன சிவசக்தி வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு உடனடியாக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சிவசக்தி திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துபோனதால் அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் அவர்கள் உரிய விசாரணை செய்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும். அதன்படி திருக்கோவிலூர் கோட்டத்தில்  இந்த ஊர் அமைந்துள்ளதால் அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய் வர்தினி முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்.

 

ஆனால், சிவசக்தியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  கொண்டு செல்லப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியர் சாய் வர்தினி விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை விசாரணை செய்து பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரைச் சான்று அளிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், "திருக்கோவிலூர் கோட்டாட்சியர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். நான் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது" என கூறி மறுத்துள்ளார். இரு அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் பிரேதப் பரிசோதனை செய்வது காலதாமதமாகி உள்ளது. அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் கோபமடைந்த சிவசக்தி உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை உடனடியாக பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரை செய்யுமாறு வாய்மொழி உத்தரவிட்டதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் பரிந்துரை சான்றளிக்க அதன் பிறகு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சாலை மறியல் செய்த பொதுமக்கள் மற்றும் சிவசக்தி உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அகால மரணம் அடைந்த ஒரு இளம்பெண்ணின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதற்கு மருத்துவர்கள் காவல்துறையினர் முயற்சி செய்தும் வருவாய்த்துறையைச் சேர்ந்த கோட்டாட்சியர்கள் பரிந்துரைச் சான்று அழிப்பதற்கு தட்டிக்கழித்ததன் காரணமாக காலதாமதமானது. அரசு அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் தங்கள் பணியைத் திறம்பட செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு யார் அறிவுரை சொல்வது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.