Skip to main content

இருசக்கர வாகன பெட்ரோல் டேங்க் வெடித்து இளைஞர் உயிரிழப்பு!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

bike petrol tank incident youth

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயனில் உள்ள மலை கிராமம் நடுதொரகடிப்பட்டு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சத்யராஜ், இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது கூலி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில், சத்யராஜ், பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, அவை தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் மேல் உள்ள கவரில் வைத்துக் கொண்டு தனது கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். 

 

அப்போது ஊத்துக்காடு பகுதியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக சத்யராஜ் சென்றுக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து சிதறியது. அந்த தீ சத்யராஜ் மீது பற்றிக் கொண்டது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரது இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட, அவரது உறவினர்கள் விரைந்து சென்று சத்யராஜை மீட்டு, கரியாலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்யராஜ், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

 

இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.