Skip to main content

ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி செய்த காவல் உதவி ஆய்வாளர்

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய கூலி தொழிலாளிகள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த அத்தனை தொழில்களும் முடங்கிவிட்டது. அதனை சார்ந்திருந்த தொழிலாளி குடும்பங்கள் அன்றாட தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில் உள்ளனர். தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தாலும் அவர்களின் சின்ன சின்ன தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியுமா என்ற எண்ணம் இப்போதே பல பெற்றோர்களிடம் எழுந்துவிட்டது. அந்த கவலை அவர்களின் முகங்களில் தெரியத் தொடங்கியுள்ளது.

 

police


இந்த நிலையில்தான் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த, படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமையில் வாடும் ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த சிறு உதவியாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நண்பர் மூலம் சில மாணவ, மாணவிகளை தேர்வு செய்து ரொக்கமாக ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார்.

 

தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கி, படிப்பில் மேலும் சிறந்து விளங்கி உயர் பதவிகளுக்கு வர வேண்டும். ஏழ்மையை நினைத்து முடங்கிவிடக் கூடாது. அதை நினைத்து படித்தாலே வறுமையையும் ஏழ்மையையும் விரட்ட முடியும். அந்த உயரிய நிலையை மாணவர்கள் அடைய வேண்டும் என வாழ்த்தினார். 


இதில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அபிநயா, 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹா.ஜெசிமா மற்றும் ஆதனூர் கிழக்கு பள்ளி மாணவர் மனோஜ்குமார், மாணவி இரா.தேவகி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ 10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். 
 

அந்த நிகழ்வின் போது பேராவூரணி வட்டாரக்கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி தி.சாமியப்பன், வட்டாரக் கல்வி அலுவலக ஊழியர் தங்கராமன், தலைமை ஆசிரியர்கள் இரா.சித்ரா தேவி, கு.செல்வி ஆகியோர் உடனிருந்தனர். கல்விக்காக செய்யும் உதவி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

 

 


 

சார்ந்த செய்திகள்