ADVERTISEMENT

டாஸ்மாக்கால் தடைபடும் திருமணம்; வேதனையில் தந்தை 

01:07 PM Feb 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில் தனது மூத்த மகன் சக்திவேலுக்கு திருமணம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வரன் தேடி வந்துள்ளார். அதேசமயம், சுப்பிரமணிக்குச் சொந்தமாக ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சக்திவேலுக்கு பெண் கொடுக்க பலர் முன் வந்த போதிலும், அவரது வீட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்றச் சொல்லி பெண் வீட்டார் நிபந்தனை விதித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சுப்பிரமணி தனக்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதிகாரிகள் இவரின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இதனால் பொறுமை இழந்த சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டவர்களுடன் நேற்று காலை டாஸ்மாக் கடை முன்பு திரண்டுள்ளார். அப்போது அவர்கள் தயாராக வைத்திருந்த சமையல் பாத்திரங்கள், பாய் தலையணை ஆகியவற்றை கடை முன்பு விரித்து படுத்துக் கொண்டனர். அங்கிருந்த பெண்கள் கடை முன்பு சமையல் செய்தனர். மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறப்பதற்கு வந்தனர். இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஊழியர்கள், உடனே கடையைத் திறக்க வேண்டும் இடத்தை காலி செய்யுங்கள் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கேட்க சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர்கள் கடையை காலி செய்யுங்கள் என்று கூற இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் விரைந்து வந்த போலீசார், சுப்பிரமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுப்பிரமணி, எனது இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் அவமானமாக கருதி என் மகனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் கடையை உடனே காலி செய்ய வேண்டும் என்று கறாராகக் கூறினார். உடனே அங்கிருந்தபடியே டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியன் என்பவரிடம் இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து எடுத்துக் கூறினார். அப்போது டாஸ்மாக் மேலாளர் விரைவில் கடையை காலி செய்வதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட சுப்பிரமணி, டாஸ்மாக் மேலாளர் கூறுவதை நம்ப முடியாது. இப்போதே கடையை காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். உடனே டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியன் கடையின் உரிமையாளர் சுப்பிரமணியிடம் செல்போனில் பேசினார். அப்போது 10 நாட்களுக்குள் கடையை காலி செய்வதாக மேலாளர் கூற இப்படித்தான் இரண்டு ஆண்டுகளாக கடையை காலி செய்வதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் காலி செய்யவில்லை. ஒன்று செய்யுங்கள் இன்றே கடையை காலி செய்யுங்கள் இல்லையென்றால் என் மகனுக்கு திருமணம் செய்ய நீங்கள் பெண் கொடுங்கள். டாஸ்மாக் கடை எனது இடத்தில் இருப்பதால் யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் இதுதான் தீர்வு என்று விவசாயி சுப்பிரமணி கூற., அதைக் கேட்டு டாஸ்மாக் மேலாளரும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT