
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் மாதர்சூடாமணி கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் மகள் கலைச்செல்வி (36) வயிற்று வலி காரணமாக சிகிச்சைபெற ரெட்டியார் ரோட்டில் உள்ள ஏ.கே.செந்தில்குமார் என்பவரின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் செந்தில்குமார் கற்ப பையில் நீர் கட்டி இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து வயிற்று வலி ஏற்படவே மீண்டும் மருத்துவரை அணுகியுள்ளார் கலைச்செல்வி. அதற்கு அவர் தூக்க மாத்திரை போடச் சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.
இப்படி ஏழு மாதங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கலைச்செல்வி வேறொரு மருத்துவரை அணுகவே, அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்து உள்ளார். பின்னர் ஸ்கேன் செய்ததில் அவர் வயிற்றில் இரும்பு துண்டு, நூல், நீடில், கட்டுபோடும் துணி உள்ளிட்டவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை அணுகிக் கேட்டபோது மருத்துவர் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காட்டுமன்னார்கோவில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.