Skip to main content

சந்திரசேகர் ஆசாத் மீதான துப்பாக்கிச் சூடு; முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

cm mk stalun condemn up chandrasekar azad issue

 

உத்தரப் பிரதேசத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவராக இருப்பவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர் நேற்று தனது கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தியோபந்த் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம கும்பல் சந்திரசேகர் ஆசாத் வந்த காரை நோக்கிச் சுட்டுள்ளனர். அதில் ஒரு குண்டு ஆசாத்தின் வயிற்றில் பாய்ந்துள்ளது. மீதி நான்கு குண்டும் காரின் கதவில் பாய்ந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஆசாத்தின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். இதனைத்  தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளது.

 

இதையடுத்து ஆசாத் தியோபந்த்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது ஆசாத் அபாய கட்டத்தைத் தாண்டி, நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில், “உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வன்முறைச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வேண்டும். இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்