கடலூர் மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளர் மற்றும் பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் பெண்ணையாற்று சாலையில் வசிக்கும் செல்வம் என்பவர், தனது சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக மாநகராட்சி பில் கலெக்டர் லட்சுமணனைஅணுகியுள்ளார். அவர், ‘வருவாய் ஆய்வாளரைச் சந்தியுங்கள்’ எனக் கூறியதைத் தொடர்ந்து, செல்வம், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரைச் சந்தித்து பேசியபோது, சொத்து வரியை அளவீடு செய்து நிர்ணயம் செய்ய, ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி தேவநாதன் ஆலோசனையின் பேரில், செல்வம் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று லட்சுமணன் மூலம் பாஸ்கரை சந்தித்து, ரூ.50 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொண்டார். இதில், முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாகக் கூறி, அதை அவர்களிடம் அளித்துள்ளார்.
இதை அங்கிருந்துகண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பில் கலெக்டர் லட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.