ADVERTISEMENT

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைத் திருமண விவகாரம்; மருத்துவக்குழு விசாரணை

11:49 PM May 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் குழுவினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து பூஜை செய்து வரும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி சில வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர். இதில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு செய்தது தவறு எனவும், சமீபத்தில் தமிழக ஆளுநர் கூறியது சர்ச்சை ஆனது. இதுதொடர்பாக இன்று சிதம்பரத்தில் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர்.

மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் விஸ்வநாதன், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, கடலூர் மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி, சென்னை கூடுதல் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று சிதம்பரம் வந்தனர். பின்னர் அவர்கள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கு குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் தொடர்பாக சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதியிடம் மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தி விசாரித்தனர். அப்போது மருத்துவ குழுவினர் ஏஎஸ்பியிடம் குழந்தை திருமணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, அந்த வழக்குகளில் எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகள் நடந்தது. எந்த மருத்துவமனையில் இந்த சோதனைகள் நடைபெற்றன என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் காவல்துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடலூர் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். தீட்சிதர்கள் குடும்பத்தில் நடந்த குழந்தைத் திருமணம் தொடர்பாக மருத்துவக் குழுவினர் தற்போது விசாரணை நடத்தி இருப்பது சிதம்பரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT