Skip to main content

‘கோவில் கழிவறையில் கேமரா... அலறியடித்த பெண்’ - தீவிர விசாரணையில் போலீஸ்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

‘Camera in temple toilet ... screaming woman’- Police in intensive investigation

 

குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால் இதனையே தவறான வழிகளில் வைக்கக்கூடாத இடங்களிலும் ரகசியமாகப் பொருத்தி வைப்பது வேதனையான விஷயம். 

 

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் காவல்நிலைய உட்கோட்டப் பகுதியிலிருக்கும் சித்தவ நாயக்கன்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பௌர்ணமி பூஜையும், மாசி மாத கொடை விழாவும் சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் பௌர்ணமி நாட்கள் மட்டுமல்லாமல் வாரநாட்களிலும் இங்கு அண்டை மாவட்டத்திலுள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கி, சுவாமி தரிசனம் செய்வதுண்டு. அதன் பொருட்டு கோவிலில் தங்குமிடம், கழிப்பறை, குளியலறைகளும் கட்டப்பட்டுள்ளன.

 

நேற்றைய பௌர்ணமி வெள்ளிக்கிழமையன்று ஆலயம் வந்த பக்தர்களில் பெண் ஒருவர் அங்குள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார். தற்செயலாக உயரே ஒரு மூலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அலறியடித்து வெளியே ஓடியிருக்கிறார். இது பற்றிய தகவல் காவல்துறைக்குப் போக இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கோவில் சென்று ஆய்வு செய்ததில் பெண்கள் குளியலறை, கழிவறை பகுதிகளில் 3 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு எஸ்.பி.யான சரவணன், "அந்தக் கிராமத்தின் கோவில் குளியலறை, கழிவறைகளில் கைப்பற்றப்பட்ட கேமராக்களில் எந்த வகையான பதிவுகளுமில்லை. அச்சம் கொள்ளத் தேவையில்லை. இணைப்புகள் கொடுக்கப்படாமல் டம்மியாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதைப் பொறுத்தியது யார் என விசாரணை நடக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆலய பூசாரி முருகனின் புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த விளாத்திகுளம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.