ADVERTISEMENT

திருச்சி கொள்ளைக்கு மூளை... யார் அந்த முருகன்?

09:25 PM Oct 05, 2019 | kalaimohan

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முகமூடி கொள்ளையர்களால் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது மணிகண்டன் மற்றும் இந்த திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷின் தாயாரான கனகவள்ளி ஆகியோர் நீதிமன்ற காவலில் 15 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுரேஷ், மணிகண்டன் இருவர் மட்டுமல்லாமல் எட்டு பேர் மீது விசாரணையை துவக்கி 7 பேருக்கு வலைவீசியுள்ளது காவல்துறை. இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளைக்கு மூலதன தலைவனாக இருந்தது பிரபல கொள்ளையன் முருகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் தேடப்படும் சுரேஷின் மைத்துனர் தான் முருகன். இந்த கொள்ளைக்கு திட்டம் தீட்டியது முருகன்தான் என்கிறது காவல்துறை.

நகை கொள்ளை தொடர்பான இணையதள தொடரைப் பார்த்து இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது எனவும், அந்த தொடரில் வருவதைபோலவே சுவரில் துளையிடுவது, ஜோக்கர், விலங்குகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வது, பொருட்களை திருடிய பின்னர் லாவகமாக தப்பிப்பது என ஒவ்வொரு கட்டமும் இணையத் தொடரில் வருவது போலவே உள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

யார் அந்த முருகன்?

திருவாரூர் அருகே உள்ள சீராத்தோப்பை சேர்ந்த முருகன். ஆரம்பத்தில் சிறு சிறு திருட்டுகளை ஆரம்பித்த முருகன் மீது தற்போது கர்நாடகாவில் மட்டும் 180 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு கர்நாடக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முருகன் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்று அவனது கைவரிசையை தொடர்ந்திருக்கிறான். அதன்பிறகு போலீசாரிடம் சிக்காத முருகன் சொந்த ஊரான சீர்தோப்புக்கு சென்று அங்குள்ள உறவினர்கள், ஏழைகள் என தான் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை தானமாக செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளான். துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வள்ளலாக வாழ்ந்துள்ளான் முருகன்.


மேலும் மாற்றுக் திறனாளிகள் இருவரைப் தத்தெடுத்து முருகன் வளர்த்து வருவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு காப்பகம் ஆரம்பித்ததாகவும் அந்த பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். முருகனால் ஆரம்பிக்கப்பட்ட அந்த காப்பகம் போலீசாரால் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வள்ளல், மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பகம் என அவதாரம் எடுத்த முருகனின் அடுத்த ஆசை சினிமா, திரைப்படத்தை எடுத்து சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டிருகிறான் முருகன். அதற்காக 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் பாலமுருகன் புரொடக்சன்ஸ் என்ற சினிமா கம்பெனியை தொடங்கிய முருகன் ''மனாசா வினாவா'' என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அந்த படத்திற்கு கதாநாயகிக்கு மட்டும் 6 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளான். தற்போது இந்த திருட்டில் தேடப்பட்டு வரும் தனது அக்காள் மகனான சுரேசை அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளான். ஆனால் அந்த படம் வெளியாகாத நிலையில் மீண்டும் திருட்டு, கொள்ளை என ஈடுபட்டு சிறை சென்றான்.

அதன்பிறகு வெளியேவந்த முருகன் ''ஆத்மா'' என்ற மற்றொரு படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கினான். இப்படி வள்ளல், சினிமா தயாரிப்பாளர், ஊனமுற்றோருக்கான காப்பகம் என இருந்த முருகன் தற்போது குணப்படுத்த முடியாத நோயின் பிடியில் சிக்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட ஒரு வேனில் முருகன் ஒவ்வொரு ஊராக செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வேனில் வாழ்ந்து வரும் முருகனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT