
திருவாரூரில் பரபரப்பான கடைவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மிளகாய்பொடியைத் தூவிவிட்டு 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருவாரூர் அலிவலம் சாலையில் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர், அனிதா என்கிற பெயரில் ஜுவல்லரி நடத்திவருகிறார். புலிவலம் விஷ்ணுதோப்பைச் சேர்ந்த கவிதா, அவரது கணவர் கணேசனை நகை கடையின் வெளியே நிற்க வைத்துவிட்டு கவிதா மட்டும் நகைக்கடையில் பர்தா அணிந்துகொண்டு நகை வாங்குவது போல் சென்று பேசியிருக்கிறார்.
திடீரென கடை உரிமையாளரான கிரண் குமார் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டு 5 பவுன் தங்கச் சங்கிலிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார். அதை சற்றும் எதிர்ப்பார்க்காத கிரண்குமார், உடனடியாக கடைக்கு வெளியே ஒடிவந்து சத்தம் போட்டுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் கவிதாவை விரட்டிப் பிடித்து அவரிடமிருந்த நகையைப் பறிமுதல் செய்துவிட்டு, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கவிதா, கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கவிதா கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதால் திருவாரூர் பகுதியே பரபரப்பானது.