ADVERTISEMENT

’வாத்தியார்’ ஆன விஜய்! ‘சின்னவர்’ ஆன சினேகன்! -காலம் ‘ரொம்பவே’ மாறிவிட்டது!

12:58 PM Jun 22, 2020 | rajavel

ADVERTISEMENT

‘என் ராஜால்ல.. என் மந்திரில்ல..’
-உணவு ஊட்டும்போது அம்மாக்கள் பிள்ளைகளை இப்படிக் கொஞ்சுவார்கள்.

ADVERTISEMENT

ராஜா, ராணி, இளவரசி, மந்திரி, ராஷ்டிரபதி, கோடீஸ்வரன், தங்கம், வைரம், முத்து என, இந்த உலகத்தில் உயர்வாக மதிக்கப்படும் அடையாளங்களை, பிள்ளைகளுக்கு பெயராகவே சூட்டி அழைப்பதில் பெருமிதம்கொள்ளும் பெற்றோர் உண்டு.

ஆனாலும், இந்தப் பட்டத்துக்கு இவர் ஒருவர் மட்டுமே தகுதியானவர் என, நம் மனதில் உறுதிபட நிலைத்துவிட்ட விஷயங்கள் பல உண்டு. காந்தி ஒருவர் மட்டுமே நமது பார்வையில் 'மகாத்மா' ஆவார். மனிதருள் மாணிக்கம் என்றால், அது 'நேரு'தான். 'கர்மவீரர்' என்றால், அது காமராஜர்தான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், தமிழ்ச் சினிமா உலகில் ‘வாத்தியார்’ என்றாலோ, ‘சின்னவர்’ என்றாலோ, அது எம்.ஜி.ஆர். மட்டும்தான்! அதே நேரத்தில், நாளைய முதல்வர் பட்டத்தை, யாருக்காகவும், யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ‘நாளைய முதல்வர்’ பட்டம் மலிவாகிவிட்டது.

எங்க வீட்டுப் பிள்ளை என்றால் எம்.ஜி.ஆர். நடித்த ஒரு எங்க வீட்டுப் பிள்ளைதான். சிவகார்த்திகேயன் படத்திற்கெல்லாம் அந்த டைட்டிலைத் தர முடியாது என்று கறார் காட்டியதால், சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை ஆனது. அதே நேரத்தில் ‘உத்தமபுத்திரன்’ என்ற ஒரே டைட்டிலில். பி.யு.சின்னப்பா, சிவாஜி கணேசன், தனுஷ் ஆகிய மூன்று நடிகர்கள் நடித்துள்ளனர்.

சரி, நடப்பு விஷயத்துக்கு வருவோம். நடிகர் விஜய்யை முதலில் 'இளைய தளபதி' என்றார்கள். பிறகு, 'தளபதி' என்றார்கள். 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘வாத்தி கமிங் ஒத்து’ என்ற வரிகள் பாடலில் வருவதால், ‘வாத்தி’ என்றார்கள். அதுவே ‘டெவலப்’ ஆகி, ‘வாத்தியார்’ என்றே, பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.

‘வாங்கய்யா வாத்தியாரய்யா..’ என்று எம்.ஜி.ஆர். நடித்த 'நம்நாடு' திரைப்படத்தில் பாடலே உண்டு. ஏனென்றால், அந்தப் படம் வருவதற்கு முன்பே, ‘வாத்தியார்’ பட்டத்துக்கு அவர் சொந்தக்காரர் ஆகிவிட்டார். சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சளைக்காமல் சொல்லி வந்ததால், வாத்தியார் பட்டம் அவருக்கு மிகவும் பொருந்திப் போனது. அதேபோல்தான், ‘சின்னவர்’ பட்டமும், தமிழ்ச் சினிமா உலகில் எம்.ஜி.ஆர். ஒருவருக்கு மட்டுமே உரித்தானது.

‘காலம் மாறினால், எல்லாமே மாறிவிடும்’ எனச் சொல்வதும், ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதும், நிரூபணமாகியே வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் ‘வாத்தியார்’ அவதாரம் எடுத்துள்ளார். பாடலாசிரியரும் நடிகருமான சினேகனை ‘சின்னவர்’ என்கிறார்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

‘என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே!’ என சகலத்தையும் ஏற்றுக்கொள்ளும், பக்குவ மனநிலையில்தான், மக்களும் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT