Skip to main content

தனியார் மயமாக்கப்படுவதின் பின்னணி என்ன? -திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

K. Veeramani


''அரசுத் துறை - பொதுத் துறைகள் குறிப்பாக பாதுகாப்புத் துறை போன்றவை தனியார் மயமாக்கப்படுவதின் பின்னணி என்ன? அரசமைப்புச் சட்ட முகவுரையில் உள்ள ‘சோசலிஸ்ட்’ என்ற தத்துவத்தைப் புறக்கணிக்கலாமா? தற்போதுள்ள சமூகநீதியை - இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் திட்டம் - தந்திரமே இதன் பின்னணி- எச்சரிக்கை'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கை வருமாறு:-
 

கரோனா தொற்று கொடூரத்தைப் பயன்படுத்தி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு - கரோனா தடுப்பு நிவாரணம் - பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை - மக்களைக் காப்பாற்ற புதிய திட்டங்கள் என்ற பெயரால், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை வெறும் பெயரளவில் செயல்படும் முனிசிபாலிட்டிகளைப் போல ஆக்கும் பணி, மிக லாவகமாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது.


மறுபுறத்தில் தற்சார்பு  (Self-Relìance) என்ற பெயரால், ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். எதையெல்லாம் தங்களது அரசியல் பொருளாதாரத் திட்டங்களாக ஆக்கிட வேண்டுமென்று நினைத்திருந்ததோ, அவற்றையெல்லாம் மிகமிக அவசரமாக - 20 லட்சம் கோடி ரூபாய் என்ற நிவாரணப் போர்வைக்குள் வைத்து வெளியிடுகின்றது. நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் விவாதத்தையேகூட தவிர்த்திடும் யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு  - ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது.


‘தோலிருக்க சுளை முழுங்கி’ என்பதுபோல...
 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (Preamble)   அரசுகளின் அடிப்படை இலக்கு - கொள்கை, முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு (Sovereign, Socialist, Secular, Democratic Republic) என்று வலியுறுத்தியுள்ள நிலையில், அதன் பெயரில் உறுதி மொழி எடுத்து ஆட்சி செய்யும் ஓர் அரசு, அதனை நடைமுறையில் ஒழிக்கும் வகையில், ‘தோலிருக்க சுளை முழுங்கி’ என்பதுபோல, அதன் அடிப்படை லட்சியங்களுக்கு நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டினைச் செயல்படுத்த - இந்தச் சூழலைப் பயன்படுத்துகிறது!
 


அரசின் சமதர்ம அடிப்படைக்கு ஏற்ப நீண்ட நெடுங்காலமாக இருந்த நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி என்பதும், அடிக்கட்டுமானம் என்பதும் பொதுத் துறை, கூட்டுத் துறை, தனியார்த் துறை (Public Sector, Joint Sector, Private Sector) ஆகிய மூன்றாக இருந்து வந்தன.


பிரதமர் வாஜ்பேயி அமைச்சரவையில்...


பல பொதுத் துறை நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் - அதிலும் லாபம் வரும் நிறுவனங்களின் பங்குகளையும்கூட - தனியாருக்கு விற்று விடும் நிலை, அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக வந்த காலத்தில் தொடங்கியது; அருண்ஷோரி ஒரு தனி அமைச்சகத்தின் Disinvestment துறை அமைச்சராகவே இருந்து வந்தார்.


பிரதமர் மோடி தலைமையில் ஆறாவது ஆண்டுகால  ஆட்சியில், அது வெகு பட்டாங்கமாய் தனியார் பெரும் - கார்ப்பரேட் முதலாளிகளுக்கே அரசின் - இராணுவம் போன்ற பல துறைகளும் தனியார் மய அறிவிப்புக்கு ஆளாகியுள்ளது.


‘ஜெட்’ வேகத்தில் தனியார் மயம்!


தனியார் மயம், கரோனா நிவாரணம் என்ற சாக்கில் மிகவும் ‘ஜெட்’ வேகத்தில் அறிவிக்கப்படுகிறது!
 

எடுத்துக்காட்டாக,
 

1. 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

2. அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்க பாக்சைட் - நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

3. கனிமச் சுரங்கங்களின் குத்தகையைப் பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி.

4. இராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு.

5. இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.

6. இந்தியாவிலுள்ள மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

7. இவை எல்லாவற்றிற்கும் மேலான கொடுமை என்ன தெரியுமா? யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். (இது ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைக்கும் துவக்கம் போல - மற்ற மாநிலங்களிலும் அடுத்த கட்டம் - இதை ஏற்று, தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம், தந்திரம் உள்ளே புதைந்துள்ளது!). இந்த அறிவிப்பின்மூலம், புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.
 

http://onelink.to/nknapp


8. விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

9. ‘இஸ்ரோ’வின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். (ராணுவ ரகசியங்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படும் சூழல் உருவாகும் என்பது மக்களுக்குத்தான் வெளிச்சம்).

10. அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். மேதகு அப்துல் கலாம் அவர்களால் உருவாக்கப்பட்ட - பயனுறு வகையில் செயல்படும் DRDO மற்றும் இஸ்ரோ போன்ற அரசின் முக்கிய ஆய்வு அமைப்புகள் இனி தனிப்பட்ட பெருமுதலாளிகளிடம் சிக்கினால், இந்தத் தனியார் மயமாக்குதல்மூலம் விளைவு  என்னவாகும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி!

பொதுத் துறைகளைத் தனியார் மயமாக்குவதில் ஏதோ பொருளாதார லாபம் மட்டும் தனியாரான கார்ப்பரேட் முதலாளிக்குப் போகிறது என்பதுதான் பலருக்குத் தெரிந்த ஒன்று.
 

சமூகநீதி - இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய அபாயம்!
 

அதைவிட மிகப்பெரிய ஆபத்து - சமூகநீதி - இட ஒதுக்கீடு - தனியார் மயமானால் - அறவே கிடையாது என்பதால், SC, ST., OBC போன்ற பல்வகை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தற்போது அளிக்கப்பட்டு வருவது தானே காணாமற் போகும் இது மிகப்பெரிய அபாயம் - பச்சையான சமூகநீதி பறிமுதல் இதனால் பட்டாங்கமாய் - சட்டபூர்வமாகவே ஆகும் என்பதால், ‘‘சர்வம் தனியார் மயம் ஜகத்’’ என்பதால், இதுதான் பலன் - இதனை நாடு தழுவிய அளவில் மக்களிடம் எதிர்க்கட்சிகளோ, நடுநிலையாளர்களோ எடுத்துச் சொல்ல முடியாத நிலை - ஊரடங்கு - தடை எல்லாம் இப்போது, அந்த வசதியும் பயன்படுத்தப்படுகிறது!
 

மக்களுக்கு விளக்கத் தயங்கக் கூடாது!
 

எப்படிக் காரியங்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றன பார்த்தீர்களா? இதனை அனைத்து முற்போக்காளர்களும், அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பாளர்களும், உண்மையான ஜனநாயகவாதிகளும் ஒருங்கிணைந்து, இந்த சமூகநீதி பறிப்பை - சோசலிச கபளீகரத்தை தடுத்து நிறுத்த முயலவேண்டும்; இதைப் பொதுமக்களுக்கு விளக்கத் தயங்கக் கூடாது!
 

‘‘எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதே நாம், நம் சுதந்திரத்திற்குத் தரும் உரிய விலையாகும்‘’ என்ற பழமொழி நினைவில் இருக்கட்டும்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“திராவிடர் கழகம் தான் எனக்கு தாய் வீடு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dravidar Kazhagam is my mother's house says CM MK Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தஞ்சாவூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பில் தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கலைஞருக்கு தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடக் கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய் வீட்டில் கலைஞர் மிக மிகப் பொருத்தமான தலைப்பு. எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்லாமல் நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்ற உணர்வோடு தான் இங்கு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அழைத்தால் எங்கும் போவேன். எப்போதும் போவேன். எந்த நேரத்திலும் போவேன். காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் என்னைக் காத்துக் கொண்டிருப்பவர்.

 

அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் தான் ஆசிரியர் கி. வீரமணி. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி. அதனால் தான் நாம் போக வேண்டிய பாதை பெரியார் திடல் தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” எனப் பேசினார்.