Skip to main content

"இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது பிரதமரின் விருப்பம்" - அண்ணாமலை பேட்டி

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

"The Prime Minister's wish is that there should be no Hindi imposition anywhere" - Annamalai interview!

 

மதுரை மாவட்டத்தில் இன்று (08/11/2022) காலை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. ஒரு அற்புதமான திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். 'எனது பூத் வலிமையான பூத்' என்கின்ற திட்டம். அதன் துவக்க விழாவிற்காக, இன்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் என்னோடு இருக்கிறார்கள். கட்சியை அடிமட்டத்திலே பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து இடங்களிலும் நம்முடைய பூத் கமிட்டி வலிமையாக இருக்க வேண்டும். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பணியாற்றாமல், 365 நாட்களும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டியை இன்று துவங்கியிருக்கின்றோம். 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது திணிக்கப்பட்டிருந்தது. கட்டாய மொழியாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாவது கல்விக் கொள்கையில் இந்தியைக் கட்டாய மொழியாக வைத்திருந்தார்கள். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது கட்டாயப் பாடமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வந்த பிறகு தான் இந்தி என்பது ஆப்சனாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்; பா.ஜ.க. கட்சியின் விருப்பம். மூன்றாவது மொழி என்பது ஆப்ஷனல். 

 

மத்தியில் இருந்து வரக்கூடிய அமைச்சர்கள் சொல்கிறார்கள், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று. ஏன் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள் என்றால், ‘இல்லம் தேடிக் கல்வி’ புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய அம்சம். அதே புதிய கல்விக் கொள்கை இன்னொரு பெயரில் வருகிறது. நம்மைப் பொறுத்த வரையில், அது வந்தால் சரி. அது எந்த பெயரில் வந்தால் என்ன? மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று பார்க்கின்றோம். 

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பாடத் திட்டத்தில் முதலாமாண்டு இந்தியைக் கொண்டு வந்த போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும் தமிழில் கொண்டு வாருங்கள் என்று முதலில் குரல் கொடுத்தது தமிழக பா.ஜ.க.. இதற்காக, தமிழகம் முழுவதுமே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்றைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நமது அமைச்சர் சொல்கிறார், பொறியியல் பாடத்தில் தமிழ் கொண்டு வந்திருக்கிறோம் என்று. இன்றைக்கு பொறியியல் பாடத்திட்டத்தில் முழுமையாகத் தமிழை வைத்து படிக்கக் கூடியவர்கள் 69 பேர் தான். 

 

ஐந்து கல்லூரிகளில் தான் அது இருக்கிறது. அப்படி இருக்கும் போது தமிழை நீங்கள் என்ன வளர்த்திருக்கிறீர்கள்? ஒரு லட்சம் பேர் படிக்கக் கூடிய பொறியியல் கல்லூரிகளில் வெறும் 69 பேர் தமிழில் படித்தால், எப்படி தமிழ் வளரும்?" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.